சிறு வியாபாரிகள், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்.எல்.ஏ., வழங்கல்
செஞ்சி; செஞ்சியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் சிறு வியாபாரிகள், விவசாயிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சுகந்தி வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தில் 7 பேருக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காய்கறி வண்டிகள், 2.14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சொட்டு நீர் பாசன இயந்திரம். 36 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தெளிப்பு நீர்பாசன உபகரணங்கள் மற்றும் வேளாண் இடுபொருட்களை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின் விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு தனி நிதி நிலை அறிக்கை உருவாக்கி 2 லட்சம் மின் இணைப்புகளை வழங்கியுள்ளார். அதிகாரிகள் விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். செஞ்சி, மேல்மலையனுார், வல்லம் தாலுகாக்களில் புதிய வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது மயிலம் தாலுகாவில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் நெல் மூட்டைகள் மழையில் இருந்து பாதுகாக்க மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் குளிர்பதனம் செய்யப்பட்ட குடோன்கள் செஞ்சி, திண்டிவனத்தில் கட்டப்படும்' என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஊராட்சி தலைவர் ரவி, வேளாண் உதவி இயக்குநர் விஜயசந்திரன், தோட்டக்கலை அலுவலர் சங்கவி, பிரியா, வேளாண்மை அலுவலர் செந்தில்நாதன், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் ராஜேஷ், நடராஜன், பிரபாகரன், ப்ரீத்தா, ஆத்மா தலைவர் வாசு ஆகியோர் பங்கேற்றனர்.