விழுப்புரத்தில் டிராபிக் பிரச்னைக்கு தீர்வு எப்போது: போக்குவரத்து போலீசார் திணறல்
விழுப்புரம்:விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண மாற்றுவழி பாதை இல்லாததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் டிராபிக்கில் சிக்கி சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வு காண முடியாமல் போக்குவரத்து போலீசாரும் திணறுகின்றனர்.விழுப்புரம் நகரில் நாளுக்கு, நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. சென்னை, திருச்சி மார்க்கங்களுக்கு மட்டுமின்றி, புதுச்சேரி, கடலுார் செல்ல விழுப்புரம் நகரம் வழியாக செல்லும் சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.இதனால், இந்த சாலையில், இரு சக்கரம், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் பஸ், லாரி, கார் மட்டுமின்றி கனரக வாகனங்கள் என ஏராளமாக செல்கின்றன. இதில், விழுப்புரம் நகர பகுதியில் உள்ள நெடுஞ்சாலை மட்டும் சுமார் 6 கி.மீ., துாரம் உள்ளது. இந்த சாலையில் காலை 8:15 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருப்பதாகல் டிராபிக் படுபிசியாகவே காணப்படும்.விழுப்புரம் நகர பகுதிகளுக்குள் செல்லும் வெளிமாவட்ட வாகனங்கள் செல்ல தற்போது புதிதாக கட்டியுள்ள விழுப்புரம் - நாகை நான்கு வழிச் சாலைக்கான பைபாஸ் இருந்தாலும், அதில் பெரும்பாலான வாகனங்கள் செல்வதில்லை. வாகனங்கள் விழுப்புரம் நகர பகுதிக்குள் வந்து செல்வதால், இங்கு வாகன போக்குவரத்து பிரச்னை என்பது தொடர் கதையாகவே உள்ளது.பண்டிகை, முகூர்த்த தினங்களில் வழக்கத்தை விட விழுப்புரம் நகரில் டிராபிக் பிரச்னை கட்டுக்கடங்காத நிலையில் இருப்பது வழக்கமாக உள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள சூழலில், போலீசார் டிராபிக் பிரச்னையை விழுப்புரம் நகரில் எப்படி சமாளிப்பது என புரியாமல் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
தீபாவளியையொட்டி 'ஒன்வே'
தீபாவளி பண்டிகை நெருங்கிய சூழலில், விழுப்புரம் நகரில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகள் உள்ள சாலையை ஒருவழிப் பாதையாக மாற்றும் பணிகளில் போக்குவரத்து போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில், கே.கே., ரோடு, காமராஜர் சாலை உள்ளிட்ட சில முக்கிய சாலைகளை ஒரு வழிபாதையாக தீபாவளி பண்டிகை வரை மக்கள் போக்குவரத்து பாதிப்பின்றி பொருட்களை வாங்கிச் செல்வதற்கு வசதியாக மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.