உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஏரிகளில் விவசாயிகள் மண் அள்ள அனுமதி வழங்கப்படுமா: மழைக்கு முன் கலெக்டரின் நடவடிக்கை தேவை

ஏரிகளில் விவசாயிகள் மண் அள்ள அனுமதி வழங்கப்படுமா: மழைக்கு முன் கலெக்டரின் நடவடிக்கை தேவை

செஞ்சி: விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிகள் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி அனைத்து ஏரிகளையும் ஆழப்படுத்தவும், விவசாயிகள் வண்டல் மண் எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் போதிய மழை இல்லை. இதனால், 95 சதவீதம் ஏரிகள் நிரம்பவில்லை. தற்போது பெரும்பாலான ஏரிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்று வறட்சி நாட்களில் ஏரிகளில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு தேர்தல் காரணங்களால் அனுமதி வழங்காமல் உள்ளனர்.தேர்தல் முடிவுகள் வரும் 4ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து தேர்தல் விதிமுறை விலக்கிக் கொள்ளப்படுகிறது. இதனால், ஏரிகளை ஆழப்படுத்தவும், விவசாயிகள் வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களை வளப்படுத்தவும் ஏரிகளில் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.வண்டல் மண் எடுக்க தற்போது தாசில்தார் அனுமதி வழங்கி வருகிறார். ஒரு விவசாயி 10 டிப்பர் மண் எடுக்க அனுமதி வழங்குகின்றனர். விவசாயி டிராக்டர் பதிவு எண்ணைக் கொடுத்து அதில் மட்டுமே மண் எடுத்துச் செல்ல வேண்டும்.மண் எடுப்பதற்கு முன் தாசில்தாரிடம் பெற்ற அனுமதி கடிதம், டிராக்டரின் டிரிப் ஷீட் ஆகியவற்றை வி.ஏ.ஓ.,விடம் கொடுத்து, அவர் முன்னிலையில் மட்டுமே மண் எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் இதை எதையும் மண் எடுப்பவர்கள் கடை பிடிப்பதில்லை.விவசாயி என்ற போர்வையில் காண்ட்ராக்டர்களும், செங்கல் சூளை ஆசாமிகளும் அனுமதி பெற்று விடுகின்றனர். இவர்கள் வருவாய்த் துறையினருக்கு செய்ய வேண்டிய மரியாதையை செய்து விட்டு, இஷ்டம் போல் 5 டிராக்டர்கள் வரை பயன் படுத்தி 10 டிப்பர் மண் எடுப்பதற்கு பதில் 100 முதல் 150 டிப்பர் மண் எடுத்து விடுகின்றனர். இவர்கள் விதிமுறைகளை மீறி ஏரிகளையும் தாறுமாறாக அதிகம் பள்ளம் எடுத்து நாசப்படுத்தி விடுகின்றனர். எனவே இந்த முறை போலி ஆசாமிகள் அனுமதி பெறுவதைக் கட்டுப்படுத்த கலெக்டரிடம் மட்டும் அனுமதி பெறும் முறையை ஏற்படுத்த வேண்டும்.அனுமதியை மீறி மண் எடுப்பதை தடுக்க மாவட்ட அளவில் பறக்கும் படை அமைத்து ஏரியில் மண் எடுக்கும் டிராக்டர்களை திடீர் ஆய்வு செய்ய வேண்டும். அனுமதி பெறாத எண்ணுடன் உள்ள டிராக்டர்களை பரிமுதல் செய்வதுடன், பணியில் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்தால் மட்டுமே உண்மையான விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை