ஜெயேந்திரா சரஸ்வதி பள்ளியில் உலக சாதனை நிகழ்ச்சி
விழுப்புரம் : விழுப்புரம் ஜெயேந்திரா சரஸ்வதி மணிவிழா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளின் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. இப்பள்ளியில் அறிவியல் கணிதம், கணினி அறிவியல் துறைகள் மூலம் மாணவ, மாணவிகளின் 1,500 படைப்புகள் வடிவமைத்த உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. இதில், எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவ, மாணவிகள் அந்தந்த துறை சார்ந்த பல்வேறு படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். அதில், போக்குவரத்து நெரிசல் கண்டறியும் கருவி, சிலந்தி வடிவ மீட்பு ரோபோ, ஓட்டுனருக்கான துாக்க தடுப்பு, கைரேகை அடிப்படையில் ஓட்டு சரிபார்ப்பு இயந்திரம், பயிர் ஒருங்கிணைந்த வளர்ப்பு முறைகள், மாசற்ற காற்றை சுத்தப்படுத்தும் முறை உட்பட 1,700க்கும் மேற்பட்ட படைப்புகளை வைத்திருந்தனர். இந்த உலக சாதனை நிகழ்ச்சியை, அரசு வழக்கறிஞர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். இதில், 2,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த படைப்புகளை பார்வையிட்ட கலாம்ஸ் உலக சாதனை புத்தகம் அலுவலர் குமரவேல், விழுப்புரம் ஜெயேந்திரா சரஸ்வதி பள்ளிக்கு உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் மெடலை பள்ளி தாளாளர் பிரகாஷிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், செயலாளர் ஜனார்த்தனன், நிர்வாகக்குழு ராஜேஷ் உட்பட பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பலர் பங்கேற்றனர்.