மூதாட்டிகளிடம் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சாலையோரம் தனியாக இருந்த மூதாட்டிகளை தாக்கி, அவர்கள் அணிந்திருந்த நகைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில், விழுப்புரம் தாலுகா, வளவனுார், கண்டமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரம் தனியாக இருந்த மூதாட்டிகளை மர்ம நபர் தாக்கி, அவர்கள் அணிந்திருந்த நகைகளை திருடி சென்றார். இது தொடர்பாக போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்தனர்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறிய, எஸ்.பி., சரவணன் உத்தரவின் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், செல்வநாயகம் தலைமையில் இரு தனிப்படை அமைக்கப்பட்டது.இந்த தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கோலியனுார் கூட்ரோடு அருகே வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்திய போது, வாகனத்தை ஓட்டியவர் நிறுத்தாமல் தப்ப முயன்றார். அப்போது கீழே விழுந்ததில், வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.பின், போலீசார், அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து அவரை போலீசார் விசாரித்ததில், அவர், வி.அகரம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் ஜெயக்குமார்,20; என்பது தெரியவந்தது. இவர், விழுப்புரம் தாலுகாவிற்கு உட்பட்ட ஒரு மூதாட்டியிடமும், வளவனுாரில் 3 பேரிடமும், கண்டமங்கலத்தில் ஒருவரிடமும் நகை திருடியதை ஒப்புகொண்டார்.இவரிடம் இருந்து திருடு போன 36.5 கிராம் தங்க நகைகள், இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து, கைது செய்தனர். தொடர் திருட்டில் ஈடுபட்ட ஜெயக்குமாரை கைது செய்த தனிப்படையினரை, எஸ்.பி., சரவணன் பாராட்டினார்.