| ADDED : ஜூலை 26, 2011 10:16 PM
விருதுநகர்:தென் மண்டலத்தில் வாடகை கட்டடத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கும் நிலையில், அங்கு புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு அனுமதியில் தாமதமாகிறது. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 981 இடங்களில் செயல்படுகின்றன. தென் மண்டலமான சென்னையில் தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநில அலுவலகம் இயங்கி வருகிறது. தென் மண்டலத்தில் தமிழகத்தில் விருதுநகர்,பெரம்பலூர், கேரளாவில் திரிசூர் , ராமவர்மபுரம், பத்தினம் திட்டா , புதுச்சேரியில் காரைக்கால் பகுதியிலும் கடந்த ஆண்டு முதல் புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்பட்டன. இந்த பள்ளிகள் தற்காலிக வாடகை கட்டடத்திலே இயங்குகின்றன. தற்போது இரண்டாம் ஆண்டு துவங்கியும் வாடகை கட்டடத்திலே இயங்குகின்றன. விருதுநகரில் மல்லாங்கிணறு ரோட்டில் 7 கி.மீ., தூரத்தில் 10 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான அனைத்து பணிகளும் முடிந்து, கட்டடம் அனுமதிக்காக தென் மண்டல அலுவலகத்திற்கு அனுப்பபட்டன. ஆனால் இன்று வரை கட்டடம் கட்டுவதற்கான அனுமதி, நிதி ஒதுக்கீடும் இல்லாமல் காலதாமதமாகிறது. இதனால் வாடகை கட்டடத்தில் நெருக்கடியான நிலையில் குழந்தைகள் சிரமம்படுகின்றனர். இதன் மீது மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு கேந்திரிய பள்ளிகளுக்கு புதிய கட்டடம் கட்ட அனுமதி வழங்கி, நிதி ஒதுக்கீடும் செய்ய வேண்டும்.இது தொடர்பாக கேந்திரிய பள்ளி முதல்வர் ஒருவர் கூறுகையில், '' மத்திய அரசு பள்ளியான கேந்திரிய பள்ளிக்கு பல்வேறு கட்டமாக வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். இடத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டடம் கட்டுவதற்கான நிதி பட்ஜெட்டில் தான் ஒதுக்கீடு செய்யப்படும். கட்டடம் கட்ட குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளாவது தேவைப்படும்'', என்றார்.