--போலீஸ் செக் போஸ்ட் பணிகள் தாமதம் ராஜபாளையத்தில் தொடருது குற்றங்கள்
ராஜபாளையம்: ராஜபாளையம் தென்றல் நகர் செண்பகத்தோப்பு ரோட்டில் குடியிருப்பு, வனப்பகுதியில் இருந்து வருவோரை கண்காணிக்க போலீஸ் செக் போஸ்ட் அனுமதி கிடைத்தும் தொடங்காததால் சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது. ராஜபாளையம் தாலுகா அலுவலகம் அருகே செண்பகத் தோப்பு செல்லும் தென்றல் நகர் ரோட்டில் சமத்துவபுரம் அடுத்து வனப்பகுதியும் பட்டா விளை நிலங்களும் இருக்கின்றன. இப்பகுதியில் தென்னை, மா உள்ளிட்ட சாகுபடி என சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. இந்நிலையில் சமத்துவபுரம் வரை உள்ள இரண்டு பகுதி குடியிருப்புகளில் அடிக்கடி ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், வனப்பகுதியில் விதிகளை மீறி நடைபெறும் செயல்கள் என தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்தது. பிரச்சனையை காரணம் காட்டி இப்பகுதியினர் அடிக்கடி சாலை மறியல் உள்ளிட்ட செயல்களால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வந்தனர். தொடர்ந்து நடைபெற்று வந்த விரும்ப தகாத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இப்பகுதியில் போலீஸ் செக் போஸ்ட் அமைத்து கண்காணிக்க வேண்டும் என தமிழக விவசாய சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ோரிக்கை விடுத்தனர். செக் போஸ்ட் வைக்க அனுமதி வழங்கி வருடங்கள கடந்த நிலையில் பணிகள் தொடங்கவில்லை. இதனால் தொடர்ந்து வன விலங்குகள் வேட்டை உள்ளிட்ட குற்ற செயல்கள் தடுக்க முடியவில்லை. எனவே செண்பகத் தோப்பு செல்லும் தென்றல் நகர் ரோட்டில் போலீஸ் செக் போஸ்ட் அமைப்பதுடன், வனத்துறையினரும் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.