இலவசமாக வண்டல் மண் அள்ளுவதில் 3 வழக்குகள், 6 வாகனங்கள் பறிமுதல்
விருதுநகர்: விருதுநகர் கண்மாய்களில் இலவசமாக களிமண், வண்டல் மண் எடுப்பதில் 3 வழக்குகள் பதியப்பட்டு 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பஞ்சாயத்துராஜ் கட்டுப்பாட்டில் உள்ள 284 கண்மாய்களில் விவசாயிகள் விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்ட தொழில்களுக்கும் இலவசமாக களிமண், வண்டல் மண் எடுக்க சம்மந்தப்பட்ட தாசில்தார் மூலம் இணைய வழியாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது வரை 1312 விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர்.கண்மாய்களில் களிமண், வண்டல் மண் எடுப்பதை கண்காணிக்க துணை கலெக்டர், தாசில்தார் நிலையில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு பகுதிகளில் தலா ஒரு வழக்கு வீதம் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.எனவே முறைகேடு, விதிமீறல்கள் இன்றி இத்திட்டத்தை பயன்படுத்த வேண்டும், என்றார்.