உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஊராட்சி முன்னாள் செயலர் உட்பட 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை *மனநலம் பாதித்த சிறுமிக்கு தொல்லை வழக்கில்

ஊராட்சி முன்னாள் செயலர் உட்பட 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை *மனநலம் பாதித்த சிறுமிக்கு தொல்லை வழக்கில்

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மனநிலை பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்த முருகன் 53, புதுப்பட்டி ஊராட்சி முன்னாள் செயலாளர் பாண்டியராஜ் 44, ஜவகர் 46, தேவராஜ் 80, ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.காரியாபட்டி அருகேவுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவருக்கு 2 பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். 3 பேரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். அவரது மனைவியும் மனநலம் பாதிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு முன் வீட்டில் இருந்து வெளியேறி சென்றார். இதுவரை எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன், சிறுமியை தென்காசியில் உள்ள காப்பகத்திலும், மற்றொரு சிறுமியை சிவகாசியில் உள்ள காப்பகத்திலும் உறவினர்கள் சேர்த்திருந்தனர்.குழந்தைகளின் தந்தையும் ஓராண்டுக்கு முன் இறந்து விட்டார். தென்காசி காப்பகத்தில் இருந்த 15 வயது சிறுமிக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டதால் 2024 ஏப்ரல் மாதம் உறவினர் அழைத்து வந்தார். இந்நிலையில் மே 7ல் சிறுமியின் உடலில் தூசி படிந்தும், உடைகள் கசங்கியும் இருந்தது. இதுகுறித்து உறவினர்கள் சிறுமியிடம் விசாரித்த போது அப்பகுதியை சேர்ந்த முருகன், தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார் என்றும், அதனையடுத்து ஊராட்சி முன்னாள் செயலர் பாண்டியராஜ், ஜவகர், தேவராஜ் ஆகியோரும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் சிறுமி தெரிவித்தார்.நான்கு பேரையும் அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் 4 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம் ரூ.7 லட்சம் வழங்க பரிந்துரை செய்தும் நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துமாரி ஆஜரானார்.இவ்வழக்கை விரைந்து விசாரித்து முடித்து தீர்ப்பளிக்க மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றமும் விரைவாக விசாரித்து சம்பவம் நடந்து 10 மாதங்களுக்குள் தீர்ப்பளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ