வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நல்ல செயல். நாடு முழுக்க செயல்படுத்தலாம்.
அனைத்து உயிர்களும் வளர்ந்து செழிக்க இயற்கையில் முக்கிய பங்காற்றுவது மரங்கள். அத்தகைய மரங்களை நாட்டின் வளர்ச்சி, நகரமயமாதல், ரோடு அமைத்தல் உள்பட பல தேவைகளுக்காக வெட்டுவது தொடர் கதையாக உள்ளது.இதனால் இயற்கை வளம் அழிந்து, வெப்பநிலை அதிகரிக்கிறது. இவை காலநிலை நிலையில் மாற்றங்களை உண்டாக்கி வெயில் காலத்தில் மழை, மழைக்காலத்தில் வெயில் வாட்டி வதைக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளன.உலகம் வெப்பமயமாதலை குறைப்பதற்காக பல்வேறு நாடுகள் புதிதாக முயற்சிகள் செய்து வனப்பரப்பை அதிகரிக்க தேவையான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றன. இது போன்ற திட்டங்கள் நமது நாட்டிலும் மத்திய, மாநில அரசுகளின் நிதி மூலம் பல்வேறு அமைப்புகளாலும், தன்னார்வலர்களாலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் மூலம் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடு அளவு குறைந்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பதால் புவி வெப்ப மயமாதலை குறைக்க முடியும். விருதுநகர் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் ஒரு கோடி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில் விருதுநகர் -- சாத்துார் நெடுஞ்சாலையில் சிவகாசி மேம்பாலத்தின் அருகே உள்ள கூரைக்குண்டு ஊராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் 2022 முதல் நெல்லிக்கனி, பப்பாளி, மா, பூங்கை, வேப்பமரம், வாழை, கொய்யா, தென்னை உள்பட பல்வேறு வகையிலான 500 மரங்கள் நடவு செய்யப்பட்டு பராமரித்து வளர்க்கப்படுகிறது.இதில் இருந்து கிடைக்கும் பழங்கள் பணியாளர்களுக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது. இங்கு தினமும் 10 பேர் பணிசெய்து மரங்களை நன்கு பராமரித்து வளர்க்கிறார்கள். இந்த மரங்களுக்கு தேவையான தண்ணீருக்கான கிணறு அமைக்கப்பட்டுள்ளது.அதன் மூலம் தினமும் தண்ணீர் ஊற்றி மரங்கள் வளர்க்கப்படுகிறது. விருதுநகர் கந்தக பூமியாக இருக்கும் நிலையில் இந்த இடத்தில் நிற்பவர்களுக்கு முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலையை கொடுக்கிறது. இவற்றை நுாறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் சிறந்த முறையில் பராமரித்து, வளர்த்து வருகின்றனர்.மரங்களுக்கு தேவையான நீரை கொடுப்பதற்காக ரூ.12 லட்சத்தில் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தின் முன்பகுதியில் ஆர்ச் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது. இதே போன்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மரங்களை வளர்த்தால் இயற்கையை பேணி பாதுகாக்க முடியும்.- ஈ.செல்வி, தலைவர், கூரைக்குண்டு ஊராட்சி.
கூரைக்குண்டு ஊராட்சியின் புதிய முயற்சியாக முன்னேடுக்கப்பட்ட மியாவாக்கி காடுகள் வளர்ப்பின் மூலம் பல்வேறு வகை மரங்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. இது போன்று நாட்டிற்கு நன்மை தரும் மரங்களை வளர்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.- காளீஸ்வரி, நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள்.
நல்ல செயல். நாடு முழுக்க செயல்படுத்தலாம்.