அரசு போக்குவரத்து கழகத்தில் வாரிசுகளுக்கு பணப்பலன் தாமதம்
விருதுநகர் : தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில்பணியில் இருக்கும் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் ஆண்டு கணக்கில் தாமதமாக வழங்கப்படுவதால் குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர்.அரசு போக்குவரத்து கழகத்தில் பணியில் இருப்பவர்கள் உயிர்இழந்து விட்டால் அவரின்வாரிசு தாரர்களான பெற்றோர், மனைவி, குழந்தைகளுக்கு பணிக்கால பணப்பலன்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஆனால் 2023ல் வாரிசுதாரர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கள் கடந்தாண்டு தான் வழங்கப்பட்டது. 2024ல் விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. 2025ல் இரண்டு மாதங்கள் முடிவடைந்து விட்டன. இப்படி வாரிசு தாரர்களுக்கு உரிய காலத்தில் வழங்க வேண்டிய பணப்பலன்களை தொடர்ந்து ஆண்டு கணக்கில் தாமதம்செய்வதால் பல குடும்பங்கள் தவிக்கின்றன. எனவே வாரிசுதாரர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை அரசு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.