உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பணியாளர் மீது நடவடிக்கை கோரி தி.மு.க., பெண் கவுன்சிலர் தர்ணா

பணியாளர் மீது நடவடிக்கை கோரி தி.மு.க., பெண் கவுன்சிலர் தர்ணா

சிவகாசி : சிவகாசியில் முறைகேட்டில் ஈடுபட்ட பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க., கவுன்சிலர் இந்திரா தேவி, கணவர் மாரீஸ்வரனுடன் மாநகராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.சிவகாசி மாநகராட்சி 5வது வார்டு கவுன்சிலர் இந்திராதேவி. இவரது வார்டுக்குட்பட்ட சிறுவர் பூங்கா தெருவில் போர்வெல் உடன் கூடிய தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த போர்வெல்லுக்கு புதிய மின் மோட்டார் மாற்றி சில மாதங்களே ஆன நிலையில் நன்றாக ஓடிக் கொண்டிருந்த மின்மோட்டார் பழுதடைந்ததாக கூறி, 6 மாதங்களுக்கு முன் எலக்ட்ரீசியன் கண்ணன் கழற்றி சென்றார். ஆனால் இதுவரை மோட்டாரை பொருத்தவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் இன்றி சிரமத்திற்கு ஆளாகினர்.இதுகுறித்து கேட்டால் மின் மோட்டார் முற்றிலும் பழுதடைந்து விட்டது, புதிய மின் மோட்டார் தான் பொருத்த வேண்டும் என்றுள்ளார். மேலும் திருத்தங்கல் பகுதி முழுவதும் உள்ள பல்வேறு மின் மோட்டார்களை பழுதடைந்ததாக கூறி கழற்றி சென்று, எலக்ட்ரீசியன் கண்ணன் விற்பனை செய்துள்ளதாக கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியிடம் கவுன்சிலர் இந்திராதேவி புகார் அளித்தார். தொடர்ந்து அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க கோரினார்.இந்நிலையில் எலக்ட்ரீசியன் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று மதியம் 1:00 மணிக்கு இந்திராதேவி, கணவர் மாரீஸ்வரன் உடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.அவரிடம் கமிஷனர், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததை அடுத்து கவுன்சிலர் இந்திரா தேவி போராட்டத்தை கைவிட்டார்.இந்திரா தேவி கூறுகையில், முறைகேடு குறித்து கமிஷனரிடம் ஏற்கனவே புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நடவடிக்கை எடுக்கக்கோரி எனது கணவருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !