மலையடிவாரத் தோப்புகளில் மின்வேலி
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார தோப்புகளில் அனுமதியின்றி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வனத்துறை , மின்சார துறையினர் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் ராக்காச்சி அம்மன் கோவில் மலையடிவார பகுதியில் மின்வேலியில் சிக்கி ஒரு யானை உயிரிழந்தது. இது தொடர்பாக கணபதி சுந்தர நாச்சியார் புரத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி,60, என்பவரை கைது செய்து, அவர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதிகளில் உள்ள தோப்புகளில் அனுமதி இன்றி மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதா, அதிக வோல்டேஜ் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் செல்வமணி தலைமையில் வனத்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், கடந்த சில நாட்களாக நேரடி கூட்டு கள ஆய்வு செய்தனர்.அப்போது தோப்பு உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களை அழைத்து, அனுமதி இன்றி மின் வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவுறுத்தினர்.