ஆக்டிங் முதல்வராக உதயநிதி செயல்படுகிறார் முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடல்
விருதுநகர்: ''தமிழகத்தில் ஆக்டிங் முதல்வராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்,'' என, விருதுநகரில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடினார்.அவர் கூறியதாவது: நேற்றுமுன்தினம் தி.மு.க., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களுக்கு வழங்கப்பட்ட உணவு அலட்சியமாக தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு உள்ளது.மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வி.சி.க., தலைவர் திருமாவளவன் தான் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.,விற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் பங்கேற்க அ.தி.மு.க., என்ன நிலைபாட்டை எடுக்கப்போகிறது என்பது குறித்தும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுவது தவறானது.தமிழகத்தில் ஆக்டிங் முதல்வராக உதயநிதி செயல்பட்டு வருகிறார். அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சியில் வழங்கப்படும் நலத்திட்ட உதவியின் போதோ, பொதுக்கூட்ட புதிய அறிவிப்புகளின் போதோ அதை சார்ந்த துறை அமைச்சர்கள் அழைக்கப்படுவதில்லை. தி.மு.க.,வில் உள்ள மூத்த அமைச்சர்களை புறந்தள்ளிவிட்டு அமைச்சர் உதயநிதிக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தரவேண்டியது எதற்கு. சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் அமைச்சராக உள்ள ஒருவர் மாவட்டம் தோறும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதுமரபு கிடையாது. அனைத்துத்துறை அலுவலர்கள் கூட்டம் நடத்தும்அதிகாரமும், மரபும் முதல்வருக்கே உண்டு. ஆகவே முதலமைச்சருக்கு நிகரான அதிகாரப்போக்கில் உதயநிதி செயல்படுவது வேடிக்கையாக உள்ளது. உதயநிதியையே முதல்வராக அறிவித்து விட்டால் எந்த பிரச்னையும் இருக்காது என்றார்.