சுரங்கப்பாதைக்கு கர்டர் டிராக் பொருத்தும் பணி
ராஜபாளையம்: ராஜபாளையம் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு முதல் கட்டமாக தண்டவாளத்தை வெட்டி கர்டர் டிராக் பொருத்தியதுடன், தரைப்பகுதி கடினமாக இருந்ததால் இலகு ரக வெடி வைத்து பாறையை தகர்க்கும் பணி நடந்தது.ராஜபாளையம் ரயில்வே மேம்பாலம் ஒட்டி உள்ள டி.பி மில்ஸ் ரோட்டில் இருந்து சத்திரப்பட்டி ரோட்டிற்கு மேம்பாலம் வழியே சுற்றிச் செல்லாமல் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சுலபமாக கடந்து செல்ல 12 மீட்டர் அகலத்தில் 800 மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. இதற்கான கான்கிரீட் பிளாக்குகள் ஏற்கனவே தயாரான நிலையில் கடந்த ஒரு வாரமாக முதற்கட்ட பணி தொடங்கியது. ஹைட்ராலிக் கிரேன் மூலம் பிளாக்குகள் துாக்கி நிறுத்தப்பட்டு பாதை சமப்படுத்தப்பட்டு வந்தது.இந்நிலையில் குழி தோண்டும் பணிக்காக முதல் கட்டமாக தண்டவாளத்தை அகற்றி இரும்பு கர்டர் பொருத்தப்பட்டது. இதற்காக கடந்த மூன்று நாட்களாக ரயில்கள்ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. கர்டர் பொருத்திய உடன் கீழ்பகுதியில் மண்ணை தோண்டும் பணி தொடங்கிய நிலையில் கடினமான பாறைகள் இருந்ததால் வெடி மூலம் அவற்றை அகற்றும் பணிகள் நடந்தன. ரயில்வே தரப்பில் ஒரு மாதத்திற்குள் பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் நெடுஞ்சாலை துறையினர் இணைப்பு ரோடு பணிகளை முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துஉள்ளனர்.