வாறுகால் கான்கிரீட்டில் ஜல் ஜீவன் குடிநீர் குழாய்கள்
விருதுநகர்: விருதுநகர் அருகே கன்னிச்சேரிபுதுாரில் வாறுகாலுக்கான கான்கிரீட்டில் 'ஜல் ஜீவன்' குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. குழாய் பழுது ஏற்பட்டால் வாறுகால் கான்கிரீட் உடைத்து சரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.விருதுநகர் அருகே கன்னிச்சேரிபுதுார் வ.உ.சி., தெருவில் வாறுகால், ரோடு, ஜல் ஜீவன் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.இங்கு வாறுகால் அமைப்பதற்காக தெருவில் பலகைகள் அமைக்கப்பட்டு, ஜல் ஜீவன் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடந்தது. ஆனால் தெரு குறுகியதாக இருப்பதால் வாறுகால் கான்கிரீட் மீது குடிநீர் குழாய்கள் பதிப்பதற்கான பணிகளை துவங்கினர். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தை பொருட்படுத்தாமல் வாறுகால் கான்கிரீட்டிலேயே குடிநீர் குழாய்களையும் அமைத்து பணிகளை முடித்து விட்டனர்.தற்போது பேவர் பிளாக் கற்கள் கொண்டு ரோடு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டால் சரி செய்ய வாறுகால் கான்கிரீட் உடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே கன்னிச்சேரிபுதுார் 1வது வார்டு வ.உ.சி., தெருவில் வாறுகால் கான்கிரீட் மீது நிறுவப்பட்ட குடிநீர் குழாய்களை அகற்றி முறையாக பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.