உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எஸ்.கல்விமடையில் சுண்ணாம்பு சத்து குடிநீர்

எஸ்.கல்விமடையில் சுண்ணாம்பு சத்து குடிநீர்

நரிக்குடி : நரிக்குடி எஸ்.கல்விமடை பகுதியில் சுண்ணாம்பு, உப்பு தன்மை நிறைந்த குடிநீர் சப்ளை செய்வதால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு பல உயிர் பலி ஏற்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர். நரிக்குடி எஸ்.கல்விமடையில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். உள்ளூரில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. குடிக்க, சமைக்க, புழக்கத்திற்கு உள்ளூர் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இதனை பயன்படுத்தி வரும் பலருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குடிநீரை ஆய்வுக்கு உட்படுத்த அக்கிராமத்தினர் வலியுறுத்தினர். ஆய்வில் குடிக்க லாயக்கற்றதாக சுண்ணாம்பு கலந்து, உப்பு தன்மை அதிகம் இருப்பதாக தெரியவந்ததாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். மாற்று இடத்திலிருந்து தண்ணீர் சப்ளை செய்ய எடுக்க வேண்டும் என்றும், மேலும் பலர் பாதிக்காமல் இருக்க மினரல் பிளான்ட் அமைத்து, குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். ராஜேந்திரன், விவசாயி: உள்ளூரில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் சப்ளை செய்கின்றனர். உப்பு தன்மை, சுண்ணாம்பு கலந்து இருப்பதால் பலருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்ற 2 ஆண்டுகளில் 10க்கு மேற்பட்டவர்கள் சிறுவயதிலே சிறுநீரக பாதிப்பால் இறந்தனர். 6 மாதத்திற்கு முன் குடிநீரை ஆய்வுக்கு உட்படுத்தி மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தினோம். ஆய்வில் குடிக்க லாயக்கற்றது என தெரிவித்தனர். உடனே மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பலர் பாதிக்கப்பட்டு, இறக்கும் முன் மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர்: அக்கிராமத்தில் சிறுநீரகப் பிரச்னை இருப்பது தெரிந்து குடிநீரை ஆய்வுக்கு அனுப்பினோம். ஆய்வில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என தெரிவித்தனர். மக்கள் அச்சத்தில் இருந்ததால் மினரல் பிளான்ட் அமைத்து குடிநீர் சப்ளை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குள் பதவிக்காலம் முடிந்ததால் மாற்று ஏற்பாடு செய்ய முடியவில்லை. இருந்தாலும் அதிகாரிகளிடத்தில் அக் கோரிக்கை நிலுவையில் உள்ளது. வாசுகி, பி.டி.ஓ., நரிக்குடி ஒன்றியம்: விசாரித்து, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ