வெங்கடாஜலபுர அம்மா பூங்காவில் மாயமான உடற்பயிற்சி கருவிகள்
சாத்துார்: சாத்துார் வெங்கடாஜலபுரத்தில் பாரதி நகரில் அம்மா பூங்காவில் பல லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சி கருவிகள் மாயமானதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சாத்துார் ஊராட்சி ஒன்றியம் வெங்கடாஜலபுரத்தில் பாரதி நகரில் அம்மா பூங்கா பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது. இங்கு நடைபயிற்சி மேற்கொள்ளவும் மேலும் உடற்பயிற்சி செய்யவும் வெயிட் லிப்டிங் உட்பட பல்வேறு கருவிகள் கொண்டு அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.பல லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன உடற்பயிற்சி கருவிகள் இங்கு நிறுவப்பட்டன.இந்த உடற்பயிற்சி கருவிகளை இந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். மின்விசிறிகளும் இருக்கைகளும் அமைக்கப்பட்டிருந்தது.ஆனால் இவை தற்போது மாயமாகிவிட்டன.அம்மா பூங்காவிற்கு காவலாளி,உடற்பயிற்சியாளர் இல்லாத நிலையில் இங்கிருந்த கருவிகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். அம்மா பூங்காவில் காணாமல் போன உடற்பயிற்சி கருவிகளை கண்டுபிடித்து மீண்டும் நிறுவிட வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.