உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கல்குறிச்சிக்குள் செல்லாத தனியார் பஸ்கள் நடவடிக்கை எடுக்க பயணிகள் எதிர்பார்ப்பு

கல்குறிச்சிக்குள் செல்லாத தனியார் பஸ்கள் நடவடிக்கை எடுக்க பயணிகள் எதிர்பார்ப்பு

காரியாபட்டி: கல்குறிச்சி ஊருக்குள் செல்லாமல் புறவழிச் சாலையில் செல்லும் தனியார் பஸ்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை, கமுதி, சாயல்குடி, இருக்கன்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மதுரை அருப்புக்கோட்டை வழித்தடத்தில் காரியாபட்டி, கல்குறிச்சி முக்கிய ஊர்களாக உள்ளன.இந்த வழித்தடத்தில் அதிக அளவிலான தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். தொலைதூர பஸ்கள் பாயிண்ட் டூ பாயிண்ட், பைபாஸ் ரைடர் என ஊர்களுக்குள் சென்று வருவதை தவிர்க்கின்றனர். காரியாபட்டி, கல்குறிச்சி உள்ளிட்ட ஊர்களிலிருந்து வெளியூர்களுக்கு சென்று வர பயணிகள் தனியார் பஸ்களை பெரும்பாலும் நம்பி இருக்கின்றனர்.சமீப காலமாக கல்குறிச்சி ஊருக்குள் வருவதை பெரும்பாலான தனியார் பஸ்கள் தவிர்த்து, புறவழிச் சாலையில் செல்கின்றன. புறவழிச் சாலையில் இறக்கிவிட கெஞ்சினாலும் பயணிகளை இறக்கி விடுவது கிடையாது. இதனால் பயணிகள் பல்வேறு பஸ்கள் மாறி வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பணம், நேரம் விரையமாவதுடன், உரிய நேரத்திற்கு சென்று வர முடியவில்லை.இதுகுறித்து டிரைவர், கண்டக்டர்களிடம் கேட்டால் ஓனர் மீது பழி சுமத்துகின்றனர். ஓனர்களிடம் தெரிவித்தால் டிரைவர்களிடம் சத்தம் போடுவது போல் போட்டு சமாதானப்படுத்தி அனுப்பி விடுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.இதுகுறித்து பலமுறை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளிடத்தில் தெரிவித்தும், கண்டும் காணாமல் இருக்கின்றனர். அரசு டவுன் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே இயக்கப்படுவதால் நீண்ட நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஊருக்குள் சென்று வருவதை தவிர்க்கும் தனியார் பஸ்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்