உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நிதி ஒதுக்கியும் கிடப்பில் போட்டதால் ரயில்வே பணிகள் தாமதம்

நிதி ஒதுக்கியும் கிடப்பில் போட்டதால் ரயில்வே பணிகள் தாமதம்

காரியாபட்டி : தென் மாவட்டங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மதுரையில் இருந்து காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், வழியாக துாத்துக்குடிக்கு புதிய ரயில் பாதை அமைக்க நிதி ஒதுக்கியும் பணிகள் செய்யாமல் கிடப்பில் போட்டதால் மக்கள், வியாபாரிகள் பாதித்து வருகின்றனர். மதுரையில் இருந்து காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், வழியாக துாத்துக்குடிக்கு ரயில்கள் இயக்க வேண்டுமென வியாபாரிகளும், மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் எம்.பி.,களும் புதிய ரயில் பாதை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியை மறக்காமல் வைத்து வந்தனர். நீண்ட கால கோரிக்கைக்கு பின் புதிய ரயில் பாதை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து, தூத்துக்குடியில் இருந்து மீளாவிட்டான், மேலூர் வரை புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதற்கு பின் விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பாதைக்கான வழித்தடம் கண்டறியும் பணி நடந்தது. சேட்டிலைட் மூலம் பாதை அமைக்கும் வழி அறியப்பட்டு, அடையாளத்திற்கு ஆங்காங்கே கம்பிகள் நட்டு வைத்தனர். விரைவில் ரயில் பாதை அமைத்து, ரயில் சேவை தொடங்கப்படும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.இந்நிலையில் இந்த ரயில் பாதை தேவையற்றது, ரயில்வேக்கு போதிய வருமானம் இருக்காது, இத்திட்டம் கைவிடப்பட வேண்டும் என சதர்ன் ரயில்வே உயர் அதிகாரிகள் ரயில்வே துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியதால், இத்திட்டம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் தேர்தலுக்கு முந்தைய மத்திய பட்ஜெட்டில் ரூ.110 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஒரு பக்கம் தேவையற்றது என்றும், மறுபக்கம் நிதி ஒதுக்கியதும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதற்கேற்ப எந்த பணிகளும் நடைபெறவில்லை. இனி ரயில் பாதை வராது என்றும், எப்படியாவது இத்திட்டம் வந்து விடும் என்றும் மக்கள் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது. அப்பகுதிகளில் நிலம் விற்பது, வாங்குவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. முதலீடு செய்தவர்கள் விற்கவும் முடியாமல், முதலீடு உள்ளவர்கள் வாங்கவும் முடியாமல் தவித்து வருகின்றனர். அதிகாரிகளிடத்தில் கேட்டால் வரும், வராது என கலந்து பேசுகின்றனர். தெளிவான பதில் இல்லாததால் பலரும் குழப்பத்தில் உள்ளனர். இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கனவு திட்டம்

அழகர்சாமி, காரியாபட்டி: காரியாபட்டி வழியாக ரயில் வருவது இப்பகுதி மக்களின் கனவு திட்டம். மகிழ்ச்சியான விஷயம் கூட. இத்திட்டம் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் நிலையில், சில மாதங்களுக்கு முன்தான் ரயில் பாதைக்கான வழித்தடத்தை கண்டறிந்து கம்பிகள் ஊன்றினர். அதற்குப் பின் கிடப்பில் போட்டனர். இத்திட்டம் குறித்து பல்வேறு கருத்துக்கள், வதந்திகள் பரப்பப்படுகின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலதாமதம் இன்றி பணிகள் துவக்க வேண்டும்

பாஸ்கரன், காரியாபட்டி: இப்பகுதியில் இருந்து ஏராளமான வியாபாரிகள் தூத்துக்குடிக்கு வியாபார ரீதியாக சென்று வருகின்றனர். ரயில் சேவை இருந்தால் கூடுதலாக வியாபாரங்கள் நடக்கும். இப்பகுதியில் வேலை வாய்ப்பு பெருகும். ஊர் வளர்ச்சி அடையும். காலதாமதம் இன்றி பணிகளை துவக்க வேண்டும். அதற்கு எம்.பி., க்களும் லோக்சபாவில் குரல் கொடுக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஜூன் 15, 2024 09:27

தேர்வு எய்யும் எம் பி களுக்கு ஹிந்தி தெரியுமானால் எந்த காரியமும் உடனடியாக நடக்கும் கர்நாடக கேரளாவில் கட்சி இருப்பது இல்லாமல் அனைத்து எம் பி களும் மைய்ய அரசில் குரல் கொடுத்து காரியங்களை சாதிக்கிறார்கள் ராம்நாத், விருதுநகர் எம் பி கல் பார்லிமென்டில் என்றாவது பேசியுள்ளாரா ??????


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ