சிவகாசி இ.எஸ்.ஐ., மருந்தகம் நாரணாபுரத்தை மையமாகக் கொண்டு செயல்பட எதிர்பார்ப்பு
சிவகாசி: சிவகாசி அருகே நாரணாபுரத்தை மையமாக கொண்டு செயல்பட வேண்டிய இ.எஸ்.ஐ., மருந்தகம் சிவகாசியில் செயல்படுவதால் இருபதாயிரம் தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இ.எஸ்.ஐ., மருந்தகத்தை நாரணாபுரத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிவகாசி அருகே நாரணாபுரம், அனுப்பன்குளம், பள்ளப்பட்டி, முதலிப்பட்டி பூச்சக்காப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள தொழிலாளர்களுக்காக நாரணாபுரத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு இ.எஸ்.ஐ., மருந்தகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் இப்பகுதியைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால் நாரணாபுரத்தில் இடம் இல்லை என சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே கேட் அருகே இ.எஸ்.ஐ., மருந்தகம் செயல்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் குறைந்தது ஆறு முதல் 10 கி.மீ., துாரம் வரை பயணம் செய்ய வேண்டி உள்ளது. மேலும் சிறிய காய்ச்சல் தலைவலி என்றால் கூட ஒரு நாள் முழுவதும் வீணாகிறது. இந்நிலையில் நாரணாபுரத்தில் 14 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க கட்டடம் கட்டப்பட்டு தற்போது வரை பயன்பாட்டில் இல்லை. எனவே இங்கு இ.எஸ்.ஐ. மருந்தகத்தை செயல்படுத்த வேண்டும் என இப்பகுதியினர் மதுரையில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம் மண்டல நிர்வாக மருத்துவ அலுவலருக்கு மனு அனுப்பினர். இதனைத் தொடர்ந்து மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர், 2023 மே 25 ல் நாரணாபுரம் இ.எஸ்.ஐ., மருந்தகம் மருத்துவ அலுவலருக்கு நாரணாபுரத்தில் இ.எஸ்.ஐ., மருந்தகம் செயல்பட அறிவுறுத்தி கடிதம் அனுப்பி இருந்தார். ஒரு ஆண்டிற்கு மேல் ஆகியும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விரைவில் நாரணாபுரத்தில் இ.எஸ்.ஐ., மருந்தகம் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.