மேலும் செய்திகள்
குடியிருப்போர் குரல் . . .
02-Jul-2025
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே புறநகர் பகுதியான காமராஜர் நகரில் வாறுகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாததால் பஸ், குடிநீர், பால் வசதிகள் அனைத்தும் வழங்காததால் மக்கள் வேதனையடைந்து வருகின்றனர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது பாலையம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்டது காமராஜர் நகர். இதில் 5க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. 8வது தெருவில் வாறுகாலில் அடைப்பு உள்ளதுஎன, 20 நாட்களுக்கு முன்பு ஊராட்சி மூலம் தோண்டப்பட்டது. அதன் பின் மூடாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் மக்கள் பள்ளத்தை தாண்டி வர முடியவில்லை. தற்காலிகமாக ஒரு மரப்பலகையை வைத்து பயந்து கொண்டே வந்து செல்கின்றனர். வயதானவர்கள் நடக்க முடியவில்லை. இந்த தெருவிற்கு தண்ணீர், பால் வண்டிகள் வருவது இல்லை. பள்ளத்தை சரி செய்ய பலமுறை ஊராட்சிக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என தெரு மக்கள் புலம்புகின்றனர். பள்ளத்தை அகலமாக தோண்டி விட்டதால் மினி பஸ்சும் வருவதில்லை. பல தெருக்களில் வாறுகால்கள் இல்லை. இருக்கின்றவையும் சேதம் அடைந்துள்ளது. ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது. அதிலும் தாமிரபரணி குடிநீருடன் போர்வெல் தண்ணீரையும் கலந்து கொடுப்பதால் தண்ணீரின் சுவை மாறி குடிக்க முடியாதபடி உள்ளது. இதனால் குடிநீரை தனியார் இடத்தில் அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. பள்ளி மாணவர்கள் பயந்து கொண்டே தான் பள்ளிக்குச் செல்ல வேண்டி உள்ளது. நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. காமராஜர் நகர் பகுதிக்கு என பொது கழிப்பறை கட்டித் தரப்பட வேண்டும். மெகா பள்ளம்
கயல்விழி, குடும்பதலைவி: காமராஜர் நகர் 8வது தெருவில் வாறுகால்பணிக்காக பள்ளத்தை தோண்டி அப்படியே போட்டு விட்டனர். இதனால் தெருவில் மக்கள் நடக்க முடியாமல் உள்ளது.பள்ளத்தை தாண்ட முடியாமல் பெண்கள் சிரமப்படுகின்றனர். குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய வண்டிகள் தெருவிற்குள் வர முடிவதில்லை. இந்த மெகா பள்ளத்தால் பல பிரச்னைக்கு ஆளாகியுள்ளோம். சுவையற்ற குடிநீர்
ராஜகோமதி, குடும்பதலைவி: எங்கள் பகுதிக்கு வரும் குடிநீர் சுவை அற்றதாக உள்ளது. தாமிரபரணி தண்ணீரையும், போர்வெல் தண்ணீரையும் கலந்து வழங்குவதால் குடிநீர் சுவை இல்லாமல் உள்ளது. இதனால் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம். குடிநீரை வாரத்தில் 3 நாட்களுக்கு ஒரு முறை ஊராட்சி வழங்க வேண்டும். தாமிரபரணி குடிநீர் மட்டும் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை வசதிகள் இல்லை
பழனியம்மாள், குடும்பதலைவி: காமராஜர் நகர் உருவாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் தேவையான அடிப்படை வசதிகள்இல்லை. ரோடுகள், வாறுகால்கள் சரியில்லை. ஊராட்சிக்கு தேவையான அனைத்து வரிகளையும் நாங்கள் கட்டுகிறோம். வசதிகளை செய்து தருவதில் ஊராட்சி மெத்தனம் காட்டுகிறது. மாவட்ட கலெக்டர், அமைச்சர் என புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
02-Jul-2025