உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோட்டோரத்தில் குப்பை கிடங்கு, மாடியில் இ சேவை மையம் சிரமத்தில் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள்

ரோட்டோரத்தில் குப்பை கிடங்கு, மாடியில் இ சேவை மையம் சிரமத்தில் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள்

காரியாபட்டி : ரோட்டோரம் கொட்டப்படும் குப்பையால் துர்நாற்றம் ஏற்படுவது, மாடியில் இயங்கும் இசேவை மையத்தால் வயதானவர்கள் ஏறி இறங்க முடியாது சிரமப்படுவது, பல ஆண்டுகளாக பயன்பாடு இன்றி இடியும் நிலையில் கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் குடியிருப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர். மல்லாங்கிணர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கோவில்பட்டி செல்லும் ரோட்டோரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. நாய், பன்றிகள் கிளறுவதுடன் பாலித்தீன் பைகள் காற்றில் பறந்து குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. துர்நாற்றம் ஏற்பட்டு அப்பகுதியில் குடியிருக்க பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. அவ்வழியாக போவோர் வருவோர் முகம் சுளித்து செல்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பணியாளர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்பு முறையாக பராமரிக்காததால் குடியிருக்க முடியாமல் காலி செய்து சென்றனர். தற்போது சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. கூட்டுறவு சங்க கட்டடத்தில் உள்ள மாடியில் இசேவை மையம் செயல்பட்டு வருகிறது. வயதானவர்கள் ஏறி இறங்க முடியவில்லை. இது போன்ற பல்வேறு பிரச்னைகளால் மக்கள் சிரமத்தில் உள்ளனர்.

சுகாதாரக்கேடு

ரமேஷ், தனியார் ஊழியர்: சேகரிக்கப்படும் குப்பையை கோவில்பட்டி செல்லும் ரோட்டோரத்தில், குடியிருப்பு அருகில் கொட்டப்பட்டு வருகின்றன. பலத்த காற்றுக்கு பாலித்தீன் பைகள் பறந்து வருவதுடன் துர்நாற்றம் ஏற்பட்டு குடியிருக்க சிரமம் ஏற்படுகிறது. நாய், பன்றிகள கிளறுவதால் அப்பகுதியில் சுகாதாரக்கேடாக உள்ளது. வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி பெறாமல் செயல்படுத்தப்படும் மண்டபங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

முதியவர்கள் சிரமம்

ஜோதிராஜ், தனியார் ஊழியர்: கூட்டுறவு சங்க கட்டடத்தில் உள்ள மாடியில் இசேவை மையம் செயல்பட்டு வருகிறது. வயதானவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் ஏறி இறங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மாடியில் ஏறும் போது மூச்சு திணறல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. கீழ்தளத்தில் உள்ள அறையில் இசேவை மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய குடியிருப்பு வேண்டும்

ராமர், முன்னாள் கவுன்சிலர்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளர்கள் குடியிருப்பு கட்டப்பட்டது இங்கு தங்கி பணிபுரிந்து வந்தனர். நாளடைவில் பராமரிப்பு இல்லாததால் சேதம் அடைந்து குடியிருக்க லாயக்கில்லாமல் போனது. வேறு இடத்திற்கு குடி பெயர்ந்து சென்றனர். தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. விபத்திற்கு முன் இவற்றை அப்புறப்படுத்தி, புதிய குடியிருப்புகள் கட்டி பணியாளர்களை குடி அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை