| ADDED : மே 15, 2024 06:57 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று நாள்களில் மூன்று கொலைகள் நடத்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.மாவட்டத்தில் ஏப்.19ல் லோக்சபா தேர்தல் நடந்தது. இதற்கான பிரசாரம், முக்கியஸ்தர்கள் வருகை, அசாம்பாவிதத்தை தடுத்தல், பாதுகாப்பு பணிகளில் போலீசார் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் தேர்தல் முடியும் வரை ஸ்டேஷன் பணிகளுக்கு கூட ஆட்கள் இல்லாமல் பற்றாக்குறை போக்கே நிலவியது.ஆனால் கொலைகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. இந்நிலையில் தற்போது தங்களின் வழக்கமான பணிகளுக்கு போலீசார் திரும்பி பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆனால் கொலை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மூன்று பேர் வெட்டி கொலை செய்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.ஸ்ரீவில்லிப்புத்துார் இடையன் குளத்தைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளரின் மகன் ஞானசேகர் 27. இவர் மே 11 இரவு செங்கல் சூளையில் லோடு இறக்க சென்ற போது வெட்டி கொலை செய்யப்பட்டார்.மதுரை மாவட்டம் கள்ளிக்குடி திருமால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் 40. இவருக்கும் காரியப்பட்டி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த வைர ஜோதி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இது தொடர்பான் பிரச்னையில் மே 13 இரவு 9:00 மணிக்கு ராமநாதன் கொலை செய்யப்பட்டார்.ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை சேர்ந்த மீன் பாசி குத்தகைதாரர் தர்மர் 50. இவர் ராஜபாளையம் தென்றல் நகர் ஆதுாரி கண்மாய் அருகே நேற்று மதியம் வெட்டி கொலை செய்யப்பட்டார்.இது போன்ற கொலை சம்பவ குற்றவாளிகளை போலீசார் பிடித்தாலும், மது பழக்கம், கஞ்சா ஆகியவை எல்லா நேரத்திலும் தடையின்றி கிடைப்பதாலேயே கொலை சம்பவங்கள் நடப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே போலீசார் தங்கள் பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு செய்து, தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை, பதுக்கல்களை கண்டறிந்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.