செப்பனிடாத ரோடு; புதர் மண்டிய கால்வாய்
ராஜபாளையம்: பாதாள சாக்கடை மேன்ஹோல்களால் விபத்து அபாயம், செப்பனிடப்படாத ரோடு, சாக்கடை அடைப்பு, புதர்மண்டிய கால்வாய் போன்ற பிரச்னைகளால் ராஜபாளையம் நகராட்சி 36வது வார்டு மக்கள்அவதிப்படுகின்றனர்.ராஜபாளையம் நகராட்சி 36வது வார்டு சங்கரன்கோவில் ரோடு, இந்திரா நகர், எம்.ஆர் நகர், பி.டி.சி ரோடு என 23 தெருக்களை உள்ளடக்கியது. ஒன்பது தெருக்களில் பாதாள சாக்கடை மேம்பாட்டு பணிகள் முடிந்து புதிய ரோடு தொடங்காததால் மண் ரோடாக உள்ளது.குறுகலான தெருக்களில் ஆக்கிரமிப்புகளால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள்செல்ல முடியாத நிலை உள்ளது. பிரதான வாய்க்காலில் மண்மேவி சாக்கடைகளில் தேங்கும்கழிவுகளால் கொசு தொல்லை அதிரித்துள்ளது.ஏற்கனவே போடப்பட்ட பேவர் பிளாக் ரோடு பராமரிப்பு பணிகளால் மேடு பள்ளங்களாக மாறியதால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். சாக்கடை தேக்கம்
சுப்ரமணியன், குடியிருப்பாளர்: சஞ்சீவி மலையில் இருந்து வரும் ஓடை குடியிருப்புகளின் கழிவுகள் இந்திரா நகரின் வழியே புதியாதி குளம் கண்மாய் கால்வாயில் செல்லும்போது மண் மேவி காணப்படுகிறது. 6 அடி உயர கால்வாய் மழையின் போது அடைப்பு ஏற்பட்டு ரோட்டில் தேங்கி நிற்கிறது. மெயின் ரோடு இணைப்பு
தலமலை, குடியிருப்பாளர்: சங்கரன்கோவில் ரோடு சினிமா தியேட்டர் ஒட்டி உள்ள பொதுப் பாதை புதர் மண்டி உள்ளது. இதனால் மெயின் ரோட்டை கடக்க சுற்றிச் செல்ல வேண்டியதாகிறது. பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை தொடங்கவில்லை. ரேஷன் கடைபொருட்களுக்கு சிக்கல்
மருதுபாண்டியன், குடியிருப்பாளர்: ஆறு மாதங்களுக்கு முன் சங்கரன்கோவில் 10வது தெரு சாக்கடை பணிகள் போது தடையாக இருந்த சாக்கடை தரைப்பாலத்தை அகற்றினர். தற்போது வரை சரி செய்யாததால் ரேஷன் கடை பொருட்கள் கொண்டு செல்வதிலும், இப்பகுதி மக்கள் வாகனங்களில் கடக்கவும் சிரமப்படுகின்றனர். மேன்ஹோல்களால் சிக்கல்
சுப்பிரமணிய ராஜா, குடியிருப்பாளர்: புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் பிரதான பாதையாக அமைந்துள்ள இங்கு பாதாள சாக்கடைக்கான மேன் ஹோல்கள் சாலையின் மட்டத்தை விட உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் தடுமாற்றமும் விபத்துக்கும் காரணமாகும் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படும்
குணா கோபிநாத், கவுன்சிலர்: ரேஷன் கடை உள்ள தெரு பாலத்திற்கும், தியேட்டர் ஒட்டியுள்ள ரோடு, பேவர் பிளாக் தெருக்கள் செப்பனிடும் போது மேடு பள்ளங்களை சரிசெய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விடுபட்ட தெருகளுக்கான பணி ஒப்பந்ததாரரின் தாமதத்தால் நிலுவையில் உள்ளது. பிரதான சாக்கடை மலையடிப்பட்டியின் பல்வேறு குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் மண்மேவுகிறது. குறைகள் சரி செய்யப்படும்.