வார்டு விசிட்
வத்திராயிருப்பு : சேதமடைந்த மேல்நிலை தண்ணீர் தொட்டி, சுகாதார வளாகம், உள்ளூர் தண்ணீருடன் கலந்து தாமிரபரணி தண்ணீர் சப்ளை, கொசு தொல்லை என பல்வேறு சிரமங்களுடன் வசித்து வருகின்றனர் வ.புதுப்பட்டி பேரூராட்சி 5வது வார்டு மக்கள்.இந்த வார்டில் ஆர்.சி. தெரு, வடக்கு தெரு ஆகிய இரு தெருக்கள் உள்ளன. இதில் தெரு ரோடுகள் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் வாறுகால்களில் கழிவுகள் தேங்கி காணப்படுகிறது.இதனால் கொசு தொல்லை சுகாதாரக்கேடு காணப்படுகிறது.பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி மின் இணைப்பு பெட்டி பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. பெண்கள் சுகாதார வளாகத்திற்கு செல்லும் வழியில் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதாரக்கேடாக உள்ளது. நீர்வரத்து ஓடையில் கழிவுகள் தேங்கி கொசுத்தொல்லை ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை தண்ணீர் தொட்டி சேதமடைந்துள்ளது. தாமிரபரணி தண்ணீருடன் உள்ளூர் நீராதார தண்ணீரும் கலந்து சப்ளை செய்யப்படுவது குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை என மக்கள் கூறுகின்றனர். சரி செய்யுங்கள்
-தீபர்ராஜ், குடியிருப்பாளர்: தெரு ரோடுகளை சீரமைக்க வேண்டும். 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கும் நிலையில் தாமிரபரணி தண்ணீரை உள்ளூர் தண்ணீருடன் கலந்து சப்ளை செய்வதை தவிர்க்க வேண்டும். தனியாக போதுமான அளவிற்கு குடிநீர் வழங்க வேண்டும். இது போன்ற அடிப்படை குறைகளை தாமதமின்றி சரி செய்ய வேண்டும். குறைகள் தீர்க்கப்படவில்லை
-வின்சென்ட் ராஜ், வார்டு உறுப்பினர்: வார்டில் நிலவும் குடிநீர் பிரச்சினை, சேதமடைந்த கட்டடங்கள் சீரமைத்தல், தாமிரபரணி குடிநீர் வழங்கல் உட்பட பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் குறித்து பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். ஒரு சிலவற்றை தவிர பிரதான குறைகள் தீர்க்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்கப்படும்
சுப்புலட்சுமி, பேரூராட்சி தலைவர்: வார்டு உறுப்பினர் மற்றும் மக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குறைகள் சரி செய்யப்படும்.