சிவகாசி சுற்றுச்சாலை அமைக்கும் பணி தீவிரம்
சிவகாசி: சிவகாசியில் சுற்றுச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்தனர்.சிவகாசியில் விருதுநகர், சாத்துார், வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார், எரிச்சநத்தம் ஆகிய ரோடுகளை இணைக்கும் வகையில் 33.5 கிலோ மீட்டர் துாரத்திற்கு சுற்றுச்சாலை அமைக்க ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்துார் -- சிவகாசி, சிவகாசி -- எரிச்சநத்தம், சிவகாசி - - விருதுநகர் ரோடுகளை இணைக்கும் வகையில் 9.92 கிலோமீட்டர் துாரத்திற்கு சுற்றுச்சாலை அமைக்கும் பணிக்கு மார்ச் 3 ல் துவங்கியது. 16 மாதங்களில் கட்டுமான பணிகளை முடித்து சுற்றுச்சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.தற்போது விருதுநகர் ரோட்டில் வடமலாபுரம் சந்திப்பில் இருந்து சுற்றுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ரோடு அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி ஆய்வு செய்தார். சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வரும் நிலையில், திருத்தங்கல் ரயில்வே மேம்பால பணிக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் சுற்றுச்சாலை பணிகளும் வேகமடுத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.