புது பஸ் ஸ்டாண்ட் ரோடு விரிவாக்கத்திற்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற 15 நாள் கெடு
ராஜபாளையம் : ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சங்கரன்கோவில் ரோடு விரிவாக்க பணிக்கு இடையூறாக உள்ள 45 ஆக்கிரமிப்புகளை 15 நாட்களுக்குள் அகற்ற நெடுஞ்சாலை துறை சார்பில் கெடு விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சங்கரன்கோவில் மாநில நெடுஞ்சாலையில் சங்கரன்கோவில் முக்கில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, தேவையற்ற விபத்தும் உயிர் பலிகளும் ஏற்பட்டு வந்தது. மதுரை--கொல்லம் நான்கு வழிச்சாலை திட்டம் ரயில்வே பணிகள் தவிர மீதம் முடிவடையும் நிலையை எட்டி உள்ளது. இந்நிலையில் அவ் வழியே வரும் வாகனங்கள் ஊருக்குள் நுழைய இந்த ரோட்டையே பயன்படுத்த வேண்டும். இதை கருத்தில் கொண்டு சங்கரன்கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையிலான 1.4 கிலோ மீட்டர் துார ரோட்டை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓடை மீது அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள பாலங்களை அகற்ற வருவாய் துறை சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் சங்கரன்கோவில் ரோட்டில் நீர் வழி ஓடையில் உள்ள பொதுத்துறை வங்கி, திருமண மண்டபம், வணிக கட்டடங்கள் உள்ளிட்ட 45 அனுமதியற்ற பாலங்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் அரசு சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்குரிய தொகை ஆக்கிரமிப்பாளர்களிடம் வசூல் செய்யப்படும் என நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.