உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 36 கி.மீ., துாரத்தில் 19 ஆயிரம் மரக்கன்றுகள் பசுமைவழிச் சாலையாகுது அழகாபுரி- - ராஜபாளையம்

36 கி.மீ., துாரத்தில் 19 ஆயிரம் மரக்கன்றுகள் பசுமைவழிச் சாலையாகுது அழகாபுரி- - ராஜபாளையம்

ஸ்ரீவில்லிபுத்துார்: மன்னர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே ரோட்டில் இருபுறமும் நட்டு வளர்த்த மரகன்றுகளே இன்று நூறாண்டுகள் கடந்த மரங்களாக நம்முடைய பயணத்திற்கு இளைப்பாற நிழல் தருகிறது. இதன் மூலம் மரங்கள் வளர்ப்பது மனித சமுதாயத்திற்கு அவசியம் என்பதை இயற்கை நமக்கு உணர்த்துகிறது.மதுரை மாவட்டத்தையும், கேரள மாநிலத்தையும் இணைக்கும் வகையில் திருமங்கலத்தில் இருந்து கொல்லம் தேசிய நெடுஞ்சாலை எண் 744ஐ, நான்கு வழிச்சாலையாக அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து தற்போது திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை பணிகள் நடந்து வருகிறது. இதில் 90 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.இந்நிலையில் இந்த நான்கு வழிச்சாலை, மற்ற சாலைகள் போல் இல்லாமல் பசுமை வழிச்சாலையாக அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு, அழகாபுரியில் இருந்து கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் வரை 36 கிலோ மீட்டர் தூரத்தில் நான்கு வழிச்சாலையின் மையப்பகுதியிலும், இரு புறங்களிலும் 19 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வளர்க்கும் பணியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஈடுபட்டுள்ளது.இதன்படி நான்கு வழிச்சாலையில் மையப்பகுதியில் காகித பூ, தங்க அரளி, மகிழம்பூ, மயில்கொன்றை, இட்லி பூ என 9 ஆயிரம் மரக்கன்றுகள், ரோட்டில் இருபுறமும் கொன்றை, புங்கம்,வேம்பு, பூவரசு, நாவல்,நீர்மருது என 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.இதனை நட்டதுடன் இல்லாமல் தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். ரோட்டில் இருபுறமும் நடப்பட்ட மரக்கன்றுகளை ஆடு, மாடுகள் சாப்பிட்டு விடக்கூடாது என்பதற்காக கம்பி வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு வழி சாலை பயன்பாட்டிற்கு வரும் போது, பசுமைவழிச் சாலைகளாக காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி