மாணவர்களுக்கு 3ம் கட்ட குறைதீர் நாள் கூட்டம்
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர்ப்பது தொடர்பான 3வது கட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.உயர்கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவர்களின் குறைகளை கண்டறிந்து வழிகாட்டுதல் வழங்க மே 17, மே 31ல் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற 65 மாணவர்களின் குறைகள், சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு உயர்கல்வி சேர்கைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.மேலும் நேற்று நடந்த கூட்டத்தில் 30 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களின் குறைகள் கேட்டறியப்பட்டு உயர்கல்வியில் சேர்வதற்கான வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதில் கலெக்டர் நேர்முக உதவியாளர் பிர்தவுஸ் பாத்திமா, உதவி இயக்குனர் அரவிந்த், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.