44 ஆண்டுகள் பழமையான அங்கன்வாடி மைய கட்டடம் சேதம்
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பேரூராட்சி 13வது வார்டில் 44 ஆண்டுகள் பழமையான அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்து எப்போது இடிந்து விடுமோ என்ற நிலையில் காணப்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 1980 ஆகஸ்ட் மாதம் குழந்தைகள் காப்பக கட்டடம் கட்டப்பட்டது. தற்போது அங்கன்வாடி மையமாக செயல்படும் இங்கு முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர்.இந்நிலையில் இந்த கட்டடத்தில் கூரை சேதமடைந்தும், உட்பகுதியில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்தும் மழை பெய்தால் தண்ணீர் தேங்கியும், எப்போது இடிந்து விடுமோ என்று அபாய நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, 44 ஆண்டுகள் பழமையான கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.