| ADDED : அக் 19, 2025 05:59 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு செய்த 5 மணி நேர மழையால் சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. விருதுநகர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 12.5 செ.மீ மழை பதிவானது. இதனால் தேவதானம் சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம், சேத்துார் பிராவடி கண்மாய், ராஜபாளையம் கருங்குளம் கண்மாய் உள்ளிட்ட பெரிய நீர் நிலைகள் நிரம்பி மறுகால் பாய்கிறது. கடந்த சில வாரங்களாக ராஜபாளையத்தில் மழை ஏமாற்றி வந்த நிலையில் இரண்டு நாட்களாக லேசான மழையும் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பொழிவும் இருந்தது. இதனால் 33 அடி உயரம் கொண்ட தேவதானம் சாஸ்தா கோவில் நீர் தேக்கம் நிறைந்து 3000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய பாசன பகுதிகள் உடைய பெரியகுளம், நகர குளம், வாண்டையார் குளம், முகவூர் குளம் உட்பட 11 கண்மாய்களுக்கும் நீர்வரத்து அதிகமானது. இந்நிலையில் பெரும்பாலான பகுதிகளில் நெல் விவசாயத்திற்காக நாற்று பாவியும், விதைப்பிற்காக விவசாய நிலங்களை தயார் படுத்த காத்திருந்த விவசாயிகள் பணிகளை மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளனர்.