பயன்பாட்டிற்கு வராமல் சேதமான சுகாதார வளாகம்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் கட்டி முடித்து பல ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமலேயே நகராட்சி சுகாதார வளாகம் சேதமடைந்ததால் லட்சக்கணக்கில் செலவிடப்பட்ட நகராட்சி நிதி வீணானது. அருப்புக்கோட்டை நகராட்சி 25 வது வார்டிற்கு உட்பட்டது தேவா டெக்ஸ் காலனி. இங்கு 5 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு சுகாதார வளாகம் வசதி இல்லாததால் மக்கள் சிரமப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு நகராட்சி மூலம் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 2015 ல், 9.50 நிதியில் சமுதாய கழிப்பிடம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வரவில்லை. பராமரிக்க ஆட்கள் இல்லை என நகராட்சி நிர்வாகம் கூறியது. பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போதைய சுகாதார வளாகத்தில் மரம் செடி கொடிகள் வளர்ந்து கட்டிடமும் பல பகுதிகளில் விரிசல் கண்டு சேதமடைந்து வருகிறது. லட்சக்கணக்கில் நகராட்சி நிதியை செலவழித்து கட்டப்பட்ட கட்டடம் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்து கிடக்கிறது. சுகாதார வளாகம் இருந்தும் பயன்படுத்த முடியவில்லை என இப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.