கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து ஓடையில் முறிந்து கிடக்கும் மரம்
நரிக்குடி : நரிக்குடி சொட்டமுறி கண்மாய்க்கு செல்லும் வரத்து ஓடையில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதுடன், பெரிய மரம் முறிந்து அடைத்துள்ளது. தண்ணீர் செல்ல வழி இல்லாததால் கண்மாய் வறண்டு உள்ளது. இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். நரிக்குடி சொட்டமுறி கண்மாய்க்கு நீர் ஆதாரமாக இசலி கண்மாய் நிறைந்து உபரி நீர் செல்லும். இதனை நம்பி அப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் நடந்து வருகிறது. அது மட்டுமல்ல கண்மாய் நிறைந்து நிலத்தடி நீர் உயரும் பட்சத்தில் தோட்ட விவசாயமும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2 கி.மீ., தூரம் உள்ள வரத்து கால்வாய், தூர்வாரி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகின. தற்போது சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து ஓடையை முழுதும் ஆக்கிரமித்துள்ளது. இதனால் தண்ணீர் எளிதாக செல்ல முடியாமல் உடைப்பு ஏற்படுகிறது. மேலும் வரத்துக் கால்வாய் கரையில் இருந்த பெரிய மரம் ஒன்று முறிந்து நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது.மழை பெய்து காட்டுப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர், வரத்து ஓடை வழியாக செல்ல வழி இன்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. கண்மாய்க்கு தண்ணீர் செல்லாததால் வறண்டு கிடக்கிறது. ஓடையில் உள்ள சீமைக் கருவேல மரங்களையும், முறிந்த மரத்தையும் அப்புறப்படுத்தி மழை நீர் எளிதாக கண்மாய்க்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.