நான்கு வழிச்சாலையில் சென்டர் மீடியனை உடைத்து குறுக்கே வரும் டூவீலர்களால் விபத்து
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நான்கு வழிச்சாலையில் உள்ள சென்டர் மீடியனை உடைத்து ரோட்டின் குறுக்கே வரும் டூவீலர்களால் தொடர் விபத்து ஏற்படுகிறது. மதுரை -_-- தூத்துக்குடி நான்கு வழி சாலை அருப்புக்கோட்டை வழியாக செல்கிறது. பாலையம்பட்டியில் முத்தரையர் நகர் வழியாக அமைக்கப்பட்டுள்ள அணுகு சாலை நான்கு வழி ரோட்டை தொடுகிறது. நான்கு வழிச்சாலையில் டிவைடர் அமைக்கப்பட்டுள்ளது. ரோட்டிற்கு மறுபுறம் உள்ள செம்பட்டி, தொட்டியங்குளம் மற்றும் புறநகர் பகுதி மக்கள் டூவீலர்களில் அருப்புக்கோட்டைக்கு வருவர். நான்கு வழிச்சாலையை பயன்படுத்தி செல்லும் போது நகருக்குள் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. இதனால் முத்தரையர் நகர் சந்திப்பில் உள்ள நான்கு வழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள டிவைடரை சேதப்படுத்தி ரோட்டில் இருந்து மறுபக்கம் குறுக்கே வந்து செல்கின்றனர். வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் வேகமாக வரும் போது, முத்தரையர் நகர் சந்திப்பில் டூவீலர்கள் ரோட்டின் குறுக்கே செல்வதால் விபத்து அடிக்கடி ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை துறையினர் இந்த சந்திப்பில் இரும்பு தடுப்புகள் அமைத்து டிவைடர்களை சேதப்படுத்தாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.