கிடப்பில் போடப்பட்ட ரோடு பணியால் விபத்து அபாயம்
சிவகாசி: சிவகாசி பெரியகுளம் கண்மாய் கரையில் ரூ.94 லட்சத்தில் ரோடு போடும் பணியில், சேதமடைந்த பழைய ரோட்டை அடித்தளமாக்கி அமைப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் ரோடு போடும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் தினமும் விபத்தில் சிக்குகின்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார் --- பார்த்திபனுார் ரோடு, சிவகாசி --- ஆலங்குளம் ரோட்டை இணைக்கும் பெரியகுளம் கண்மாய் கரை ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். பள்ளி நேரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் நகருக்குள் செல்லாமல், இந்த ரோடு வழியாக மாற்றி விடப்பட்டது.மேலும் சாத்துார், வெம்பக்கோட்டை பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சிவகாசி நகருக்குள் வராமல் இந்த ரோடு வழியாக ஸ்ரீவில்லிபுத்துார் சென்று மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறது. ரயில்வே மேம்பால பணி தொடங்கிய நிலையில் இந்த ரோடு முக்கிய மாற்று வழித்தடமாக செயல்படுகிறது. இதனால் ரோட்டை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.முதல்வரின் கிராமசாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.94.75 லட்சத்தில் 1.4 கி.மீ துார பெரியகுளம் கண்மாய் கரையில் புதிய தார் ரோடு அமைக்க செப். 18 ல் அடிக்கல் நாட்டப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே சேதமடைந்த பழைய ரோடு பெயர்க்கப்பட்டு இரு மாதங்களாக அப்படியே விடப்பட்டது. மீண்டும் ரோடு அமைக்கும் பணிகள் தொடங்கிய நிலையில், கிளறிய ரோட்டை அடித்தளமாக அமைத்து ரோடு அமைக்கும் பணி நடந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதன் மீது ஜல்லிக்கற்கள் போடப்பட்டது. தற்போது பணிகள் மீண்டும் கிடப்பில் போடப்பட்டதால் ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளது. கார் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் செல்லும் போது அதன் பெயர்களில் கற்கள் அடித்து வருகிற மாணவர்கள் மீது தெரிகிறது. டூவீலர் சைக்கிளில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். பெரியகுளம் கண்மாய் கரையில் கிடப்பில் உள்ள ரோட்டை விரைவில் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.