சாத்துார்-ஏழாயிரம் பண்ணை ரோட்டில் வேகத்தடைகளால் தொடருது விபத்து
சாத்துார் : சாத்துார் -- ஏழாயிரம் பண்ணை ரோட்டில் உள்ள வேகத்தடைகளால் விபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சாத்துாரில் இருந்து ஏழாயிரம் பண்ணை செல்லும் ரோட்டில் ஒ. மேட்டுப் பட்டி, ஒத்தையால், சூரங்குடி விலக்கு, துாங்கா ரெட்டிபட்டி, பழைய ஏழாயிரம் பண்ணை என வழிநெடுகிலும் பத்துக்கும் மேற்பட்ட எச்சரிக்கை பலகை இல்லாத வேகத்தடைகள் உள்ளன.இந்த வேகத்தடைகள் மீது பூசப்பட்டிருந்த வெள்ளை கோடுகள் அழிந்து போன நிலையிலும், இரவு நேரத்தில் ஒளிரக்கூடிய மஞ்சள் சிவப்பு நிற ஒளிரும் ஒழிப்பான்களும் உடைந்து போன நிலையிலும் உள்ளது.பல பகுதிகளில் வேகத்தடை இருப்பதற்கான எச்சரிக்கை பலகைகள் இல்லை. மாலை ,இரவு நேரங்களில் சாத்துாரில் இருந்து ஏழாயிரம் பண்ணைக்கு இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இந்த வேகத்தடைகளால் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடையும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.அடுத்தடுத்து ரோட்டில் உள்ள வேகத்தடைகள் காரணமாக தீ , சாலை விபத்து ஏற்படும் போது தீயணைப்பு மீட்பு வாகனங்களும் விரைவாக செல்ல முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க வேகத்தடைகள் உள்ள பகுதிகளில் இருபுறமும் குறிப்பிட்ட துரரத்திற்க்கு முன்பே எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.மேலும் வேகமாக வரும் வாகனங்கள் துாரத்தில் வரும்போதே வேகத்தடைகள் இருப்பதை உணரும் வகையில் வெள்ளை கோடுகள் பூசுவதோடு, இவற்றில் வாகன ஓட்டிகள் கண்களுக்கு தெரியும் வகையில் சிவப்பு மஞ்சள் ஒளிரும் விளக்குகளை பொருத்தவும் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.