காரியாபட்டி பிரிவு ரோட்டில் அதிகரிக்கும் விபத்துக்கள்
காரியாபட்டி, மதுரை -தூத்துக்குடி நான்கு வழி சாலையில் கல்குறிச்சி , காரியாபட்டி பிரிவு ரோட்டில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதை தவிர்க்க மேம்பாலம் கட்ட வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். தூத்துக்குடியில் துறைமுகம் இருப்பதால் கனரக வாகனங்கள் ஏராளமாக வந்து செல்கின்றன. திருச்செந்தூரில் முருகன் கோயில் இருப்பதால் பக்தர்கள் அடிக்கடி சென்று வருகின்றனர். 13 ஆண்டுகளுக்கு முன் மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. போதிய அடிப்படை வசதிகள் செய்யவில்லை. இதைத்தொடர்ந்து காரியாபட்டி, கல்குறிச்சி பிரிவு ரோடுகளில் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. வாகனங்கள் தொடர்ச்சியாக வருவதால் சாலையை கடப்பதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்கள் தூரமாக வருவதாக எண்ணி ரோட்டை கடக்க முற்படுகின்றனர். சட்டென அருகில் வந்து விடுவதால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்படுகிறது. பெரும்பாலான பிரிவு ரோடுகளில் சிக்னல்கள் கிடையாது. பிரிவு ரோடு இருப்பது தெரியாமல் அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக காரியாபட்டி, கல்குறிச்சி பிரிவு ரோடுகளில் மாதத்திற்கு 2, 3 விபத்துக்கள் ஏற்படுகின்றன. வாகன போக்குவரத்திற்கு ஏற்ப ரோடுகளை மாற்றி அமைத்து அடிப்படை வசதிகளை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகளை கண்டறிந்து, உயிரிழப்புகளை தடுக்க மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.