பாழாகும் கல் மண்டபங்கள் பாதுகாக்க நடவடிக்கை தேவை
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் மேலதுலுக்கன் குளத்தில் பழங்கால கல்மண்டபம் பாழாகும் நிலையில் உள்ளது. இதை பாதுகாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்.மேலதுலுக்கன்குளத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு பொது பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கல்மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் தற்போது போதிய பராமரிப்பு இன்றி சிதிலமடையும் நிலையில் உள்ளது. கல்மண்டபத்தின் தரைதளம் முழுவதும் பெயர்ந்து மண் தரையாக இருப்பதால் முள்கள் வளர்ந்து நிறைந்து காணப்படுகிறது. கூரையின் செங்கல் கட்டுமானத்தில் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து விட்டது. தற்போது கட்டுமானம் அப்படியே வெளியே தெரியும் படி உள்ளது. கல் துாண்களும் வலுவற்று இருப்பதால் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இங்கு சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.இதே போன்று மாவட்டத்தில் பல பகுதிகளில் பழங்கால கல்மண்டங்கள் போதிய பராமரிப்பு இன்றி பாழாகும் நிலையிலேயே உள்ளது. எனவே மேலதுலுக்கன்குளத்தில் உள்ள பழங்கால கல்மண்டபத்தை முறையாக பராமரித்து, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.