மேலும் செய்திகள்
மருத்துவக்கல்லுாரிகளில் சலவை பணிகள் பாதிப்பு
15-Aug-2025
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில் சலவை செய்வதற்கான ஊழியர்கள் பற்றாக்குறையால் ஒரு உள்நோயாளி பயன்படுத்திய படுக்கை விரிப்புகளை சலவை செய்யாமல் மற்ற உள்நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் ஆக. 13ல் செய்தி வெளியானதையடுத்து சலவை பணிகளில் தேக்க நிலையை போக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை தற்போது 1250 படுக்கைகளுடன் செயல்படுகிறது. உள்நோயாளிகளின் படுக்கைகளில் விரிப்புகள், போர்வைகள், தலையணை உறைகள், அறுவை சிகிச்சை அரங்குக்கான சீருடைகள், மகப்பேறு பிரிவு பணியாளர்களுக்கான சீருடைகள், டாக்டர்களுக்கான சீருடைகள் உள்பட அனைத்து மருத்துவமனை துணிகளையும் தினமும் தரைதளத்தில் சலவை செய்து அந்தந்த வார்டுகளுக்கும், டாக்டர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் இப்பணிகளை செய்ய நிரந்தர ஊழியர்கள் 22 பேர் தற்போது வரை நியமிக்கப்படாததால் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் சலவை பணிகளை செய்து வந்தனர். இவர்களில் 8 பேர் இருந்த நிலையில் 4 பேர் வேலை இழந்து 4 பேர் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். இதனால் நோயாளிகளின் விரிப்புகள், போர்வைகள், தலையணை உறைகள் குறிப்பிட்ட நேரத்தில் சலவை செய்து முடிக்க முடியாமல் மூடை மூடையாக தேங்கியது. இதனால் வார்டுகளில் ஒரு உள்நோயாளி பயன்படுத்திய விரிப்புகள், போர்வைகள், தலையணை உறைகள் ஆகியவற்றை சலவை செய்யாமல் அப்படியே மற்ற உள்நோயாளிகளுக்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் ஆக. 13ல் செய்தி வெளியானது. இதையடுத்து தற்போது சலவை பணிகளில் தேக்க நிலை இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கையை மருத்துவமனை நிர்வாகம் எடுத்துள்ளது. இது குறித்து விருதுநகர் அரசு மருத்துவமனை டீன் ஜெயசிங் கூறியதாவது: மருத்துவமனை வார்டுகளில் இருந்த படுக்கை விரிப்புகள், போர்வைகள், தலையணை உறைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு அந்தந்த வார்டுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது போன்ற தவறுகளை தவிர்க்க சலவை ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
15-Aug-2025