உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தரம் உயர்ந்த 16 ஸ்டேஷன்களில் கூடுதல் போலீசார் தேவை

தரம் உயர்ந்த 16 ஸ்டேஷன்களில் கூடுதல் போலீசார் தேவை

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 16 போலீஸ் ஸ்டேஷன்கள் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன்களாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. இவற்றில் இன்ஸ்பெக்டர் பணியிடமின்றி கூடுதலாக போலீசாரையும் நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக எஸ்.ஐ., ஸ்டேஷன்களாக இருந்தவற்றை இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன்களாக தரம் உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 280 போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப்பட்டு இன்ஸ்பெக்டர் தலைமையில் செயல்படும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் ஆமத்துார், மாரனேரி, எம்.புதுப்பட்டி, மல்லாங்கிணர், பந்தல்குடி, கீழராஜகுலராமன், சாத்துார் தாலுகா, அம்மாபட்டி- அப்பையநாயக்கன்பட்டி இணைப்பு, ஏழாயிரம் பண்ணை, ஆலங்குளம், மம்சாபுரம் - வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்துார் டவுன்- தாலுகா, நத்தம்பட்டி-கூமாபட்டி, எம்.ரெட்டியபட்டி-பரளச்சி, நரிக்குடி-ஏ.முக்குளம், வீரசோழன்-கட்டனுார் போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் எஸ்.ஐ., ஸ்டேஷன்களை அப்படியே இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன்களாக தரம் உயர்த்தாமல் ஓரிரு இரு எஸ்.ஐ., ஸ்டேஷன்களை இணைத்து ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையிலான ஸ்டேஷன்களாக தரம் உயர்த்தப்பட்டதால் எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ.,க்கள், போலீசார் பணியிடங்கள் புதிதாக உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு, திருவிழா, முக்கியஸ்தர்கள் வருகை ஆகிய பணிகளுக்கு போலீசார் சென்று விட்டால் ஸ்டேஷன் பணிகளுக்கு ஆட்கள் இல்லாமல் போகும் நிலை ஏற்படும். எனவே புதிதாக தரம் உயர்த்தப்பட்ட 16 போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் கூடுதலாக எஸ்.ஐ., போலீசார் பணியிடங்களை உருவாக்கி நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ