உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தீபாவளி பண்டிகையை ஒட்டி பஜாரில் கூடுதல் போலீஸ் கண்காணிப்பு தேவை

தீபாவளி பண்டிகையை ஒட்டி பஜாரில் கூடுதல் போலீஸ் கண்காணிப்பு தேவை

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி கிராமப்புறங்களில் மக்கள் அதிக அளவில் வந்து செல்வதால் பிக்பாக்கெட் மற்றும் திருட்டுகளை தடுக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு தேவையாக உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அருப்புக்கோட்டை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் ஜவுளிகள், நகைகள் வாங்க பஜார் பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். மதுரை ரோடு, திருச்சுழி ரோடு, காசு கடை பஜார், அண்ணாதுரை சிலை உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளிக்கடைகள், நகை கடைகள் மற்றும் பிற நிறுவனங்கள் உள்ளதால் இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பண்டிகை வருவதை ஒட்டி காலையிலிருந்து கூட்டம் அதிக அளவில் வந்து செல்கிறது. பணப்புழக்கமும் அதிக அளவில் இருக்கும். இதையொட்டி இந்தப் பகுதியில் திருடர்கள் அதிகமாக சுற்றி திரிகின்றனர். மெயின் பஜார் அகமுடையார் மகால் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் திருட்டுச் சம்பவம் அதிக அளவில் நடைபெறுகிறது. கிராம மக்கள் நகைகள், ஜவுளிகளை வாங்கி இங்கு தான் பஸ் ஏறுவர். இதை பயன்படுத்தி திருடர்கள் பெண்களிடம் பர்ஸ்கள், அலைபேசிகளை திருடி செல்கின்றனர். மாவட்ட போலீஸ் நிர்வாகம் பஜார் பகுதிகளில் கூடுதல் போலீசார்களை நியமித்து கண்காணிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பஜார் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி., கேமராக்கள் முறையாக இயங்குகின்றனவா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ