மழைக்கால நோய்களிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க அறிவுரை
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் கால்நடைகளை பாதிக்கும் நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாப்பது குறித்து கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் எட்வின் ஜேம்ஸ் ஜெபதாஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: மழைக்காலத்தில் குளிர்ந்த குடிநீர், ஈரமான தீவனங்களை உண்பதால் பாதிக்கப்பட்டு மாடுகளின் பால் உற்பத்தி குறைந்தும், ஆடு, கோழிகளின் உடல் எடை குறைந்து மெலிந்து விடும். மழையில் நனைந்து கெட்டுப்போன தீவனங்களை உண்பதால் பல பாக்டீரியாக்கள், பூஞ்சை காளான் நோய்கள் பரவுகின்றன. கொட்டைகையின் தற்காலிக மின் இணைப்பை மழையின் போது அகற்ற வேண்டும். மழை நேரத்தில் மின் கம்பங்கள், மரங்களுக்கு அடியில் கால்நடைகளை கட்டக்கூடாது. பகலில் பசுந்தீவனம், இரவில் வைக்கோல் கொடுக்க வேண்டும். சேமித்து வைத்த குடிநீர் அதிக குளிர்ச்சியாக இருப்பதால் நுரையீரல் நோய்கள் ஏற்படும். குடிநீரை சூடுபடுத்தி வெதுவெதுப்பாக கால்நடைகளுக்கு வழங்க வேண்டும். மாடுகளுக்கு சப்பை, தொண்டை அடைப்பான், அடைப்பான், கோமாரி நோய்கள் வேகமாக பரவும் என்பதால் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். மழையில் சினை மாடுகளுக்கு உணவு சத்து பற்றாக்குறையால் வரும் குறை பிரசவத்தை தவிர்க்க சரிவிகித உணவு, மருத்துவர் ஆலோசனைப்படி தாதுஉப்பு கலவை வழங்க வேண்டும். கன்றுகளை ஈரப்பதம் இல்லாத காற்றோட்டமான இடத்தில் கட்டுவதால் கழிச்சல், நுரையீரல் தொற்று நோய்களில் இருந்து பாதுகாத்திடலாம். தேங்கிய நீரை குடித்தால் ஆடுகளுக்கு நாடிவீக்கம், கழிச்சல், சளி ஆகிய அறிகுறிகளுடன் ஆட்டுக்கொல்லி, துள்ளுமாரி நோய் பாதிப்பு ஏற்படும். நோய்வாய்ப்பட்ட ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லாமல் தனியாக கொட்டகையில் வைத்து மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசிகள் போட வேண்டும். நாட்டுக்கோழி குஞ்சுகள் அதிக குளிர்ச்சி, ஈரத்தன்மையால் நோய் தாக்கி பலியாகும். அதனால் கொட்டகை, கூண்டுகளில் உமி, மரத்துாள் தரையில் பரப்பி பராமரித்தால் ஈரத்தன்மை குறைந்து நோயில் இருந்து பாதுகாக்க முடியும். ஆடு, மாடு, கோழிகளுக்கு நோய் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக கால்நடை மருந்தகத்தை அணுக வேண்டும்.. மாவட்டத்தில் கால்நடைகளை பாதுகாப்பதற்கான அவசர கால ஊர்தி எண் 1962 தொடர்பு கொண்டு தேவையான மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். என்றார்.