| ADDED : பிப் 10, 2024 04:11 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் குவாரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு இடம், தோண்டுவது மற்றொரு இடம் என ஒரு சில குவாரிகள் செயல்படுகிறது. இதை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் நகர் பகுதிகளை சுற்றியுள்ள புறநகர், ஊரகப்பகுதிகளில் அதிக அளவில் குவாரிகள் செயல்படுகிறது. இந்த குவாரிகள் மூலம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும், பிற மாவட்டங்களுக்கும் கட்டுமானத்திற்கு தேவையான கிராவல் மண், ஜல்லி, குண்டு கற்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. குவாரிகளுக்கு அனுமதி பெறுவோரில் சிலர் அனுமதி பெற்ற இடம் ஒன்றாகவும், தோண்டும் இடம் ஒன்றாகவும் உள்ளது. இது போன்ற செயல்கள் குவாரிகளுக்கு உள்ளே நடப்பதால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரிவதில்லை.இப்படி முறைகேடாக வெட்டி எடுக்கப்படும் கற்கள், மணலை விற்று உரிமையாளர்கள் லாபம் சம்பாதித்து விடுகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதிகாரிகள் ஆய்வு பணிகள் செய்வதால், அப்போது தான் முறைகேடு நடந்திருப்பதை கண்டறிகின்றனர்.இது போன்ற அனுமதி பெறாத குவாரிகள் தொடர்ந்து செயல்படுவதால், அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலம், நீர், காற்று மாசடைவது அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.எனவே அனுமதி பெற்று செயல்படும் குவாரிகள், அனுமதித்த இடங்களில் தான் செயல்படுகிறதா, அனுமதித்த அளவை விட அதிகமான ஆழத்திற்கு தோண்டப்பட்டுள்ளதா என அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.