அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம் விருதுநகரில் தாமதம்
மத்திய அரசு சார்பில் இந்தியா முழுவதும் உள்ள சிறிய ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகளுக்கான நவீன வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 'அம்ரித் பாரத் ஸ்டேஷன்' திட்டம் 2022 டிச. ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் நீண்ட கால தேவையின் அடிப்படையில் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கான ஓய்வு அறை, காத்திருப்பு அறை, கழிப்பறை, லிப்ட், எஸ்குலேட்டர், இலவச இணைய சேவை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், நடை மேடை முழுவதும் கூரை அமைத்தல், ஒரு பொருள் ஒரு நிலையம் திட்டத்திற்கான விற்பனை நிலையம், அலங்கார வளைவு, வடிவமைப்பு மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதிக வருவாய், பாரம்பரிய நகரங்கள், முக்கிய வழித்தடம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கோட்டத்திற்கு 15 ரயில்வே ஸ்டேஷன்கள் என மொத்தம் 1000 ரயில்வே ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டது. இதில் மதுரை கோட்டத்தில் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்கள் சேர்க்கப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தென்னிந்தியாவின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான சிவகாசி அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். சிவகாசி ரயில்வே ஸ்டேஷனில் இரண்டாவது நடை மேடையில் கூரை ,காத்திருப்பு அறை, போதிய தங்கும் அறை இல்லாததால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனைத் தொடர்ந்து புதிதாக துவங்கப்பட்ட அம்ரித் பாரத் ஸ்டேஷன் 2.0 திட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்கள் சேர்க்கப்பட்டது. இதில் சிவகாசி ரயில்வே ஸ்டேஷனில் முதற்கட்டமாக நடை மேம்பாலத்தில் இரு புறங்களிலும் லிப்ட் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால் பயணிகள் காத்திருப்பு அறை, பயணிகள் தங்கும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இரண்டாவது நடைமேடை முழுவதும் கூரை, கழிப்பறை, இருக்கை உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதே போல்தான் அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனும் அம்ரித் பாரத் ஸ்டேஷன் 2.0 திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டும் மேம்படுத்தும் பணிகள் தொடங்கவில்லை. இந்நிலையில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா சிவகாசி ரயில்வே ஸ்டேஷனை ஆய்வு செய்வதற்காக வந்தார். அவரிடம் ரயில் பயணிகள் சங்கத்தினர் ஸ்டேஷனில் புதுப்பிப்பது குறித்து கோரிக்கை விடுத்தனர். எனவே இத்திட்டத்தின் கீழ் உடனடியாக அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.