காரியாபட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; பாரபட்சம் இன்றி அகற்ற எதிர்பார்ப்பு
காரியாபட்டி : காரியாபட்டியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. பாரபட்சம் இன்றி அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டியில் சில மாதங்களுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதற்காக ரூ. பல லட்சம் செலவு செய்யப்பட்டன. இதனால் வாகனங்கள் சென்றுவர ஏதுவாக இருந்தது. அதிகாரிகள் ஆக்கிரமிக்க கூடாது என எச்சரிக்கை பலகை வைத்தனர். மீறி ஆக்கிரமித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதை கண்டுகொள்ளாமல் மீண்டும் சில நாட்களிலே ஆக்கிரமிப்புகள் முளைக்க தொடங்கின. போக்குவரத்திற்கு பெரிதும்இடையூறு ஏற்பட்டது. பஜாரில் இருந்து செவல்பட்டி வரை வாகன ஓட்டிகள் படாதபாடு படுகின்றனர். டூவீலரில் கடைகளுக்கு வருபவர்கள் ரோட்டோரத்தில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். அத்துடன் கடைக்காரர்கள்மீண்டும் ரோடு வரை ஆக்கிரமித்து செட்டுகள் அமைத்தனர். மீண்டும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. ரூ. பல லட்சம் செலவு செய்தும் வீணானது குறித்து பலர் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து போக்குவரத்துக்கு நெருக்கடி இருந்து வருவது குறித்து நெடுஞ்சாலைத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். பாரபட்சம் இன்றி அனைத்து இடங்களில் உள்ள ஆக்கிரமங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.