உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோயில்கள் பாதுகாப்பிற்கு கூடுதல் காவலாளிகள் நியமனம் செய்யுங்க; இரவு ரோந்து போலீசாரின் கண்காணிப்பும் அவசியம்

கோயில்கள் பாதுகாப்பிற்கு கூடுதல் காவலாளிகள் நியமனம் செய்யுங்க; இரவு ரோந்து போலீசாரின் கண்காணிப்பும் அவசியம்

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் உட்பட அனைத்து கோயில்களிலும் கூடுதலாக இரவு நேர காவலாளிகள் நியமிக்கப்பட வேண்டும். அந்தந்த பகுதி போலீசார் இரவு ரோந்தின் போது கண்காணிப்பதும் மிகவும் அவசியம். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில், வைத்தியநாத சுவாமி கோயில், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், காட்டழகர் சுந்தரராஜ பெருமாள், பெரிய மாரியம்மன், பழனி ஆண்டவர், சதுரகிரி சுந்தர மகாலிங்கம், வத்திராயிருப்பு சேது நாராயண பெருமாள், காசி விஸ்வநாதர்,, ராஜபாளையத்தில் மாயூரநாதர் சுவாமி, சேத்துாரில் திருக்கண்ணீஸ்வரர், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி, திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள், இருக்கன்குடி மாரியம்மன், திருச்சுழி திருமேனி நாதர் கோயில் உட்பட பல்வேறு புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன. இதில் நகர் பகுதியில் உள்ள பிரசித்தியடைந்த கோயில்களுக்கு அதிகளவில் பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் போல் பல கோயில்கள் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்திலும், பல்வேறு கிராமங்களிலும் உள்ளது. இதில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வருமானம் அதிகம் கொண்ட கோயில்களில் இரவு நேர காவலாளிகளாக முன்னாள் ராணுவத்தினர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தினமும் பணிக்கு வந்துள்ளதை இரவு ரோந்து செல்லும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் ஆய்வு செய்து பணியில் இருப்பதை உறுதி செய்வார்கள். இந்நிலையில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள், பணிச்சுமை, வெளி மாவட்ட பாதுகாப்பு பணி காரணமாகவும் இரவு ரோந்து செல்லும் போலீசார் இதனை சரிவர கண்காணிப்பது இல்லை. குறிப்பாக அதிகளவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத கோயில் பகுதிகளில் போலீசார் ரோந்து செல்வது கேள்விக்குறியதாக உள்ளது. மேலும், அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்ட பல்வேறு கோயில்களில் காவலாளிகள் இல்லாத நிலையும் காணப்படுகிறது. தேவதானம் கோயில் சம்பவத்திற்கு பிறகு தான் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் இரவு நேர காவலாளி இல்லை என்பதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களிலும் காணப்படும் நிலை உள்ளது. அறநிலையத்துறை கோயில்கள் தவிர்த்து கிராமங்களில் உள்ள கோயில்களிலும் இரவு நேர காவலாளிகள் இல்லாத நிலை உள்ளது. இதனால் உண்டியல் உடைத்து திருட்டு போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகமும், அறநிலையத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கோயில்களிலும் இரவு நேர காவலாளிகள் இருப்பதை இரவு ரோந்து செல்லும் போலீசார் கண்காணிக்க வேண்டும். நகர் பகுதியில் உள்ள கோயில்கள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளில் உள்ள கோயில்களிலும் இரவு நேர பாதுகாப்பினை போலீஸ் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ