டி.என்.பி.எஸ்.சி., மூலம் ஊராட்சி செயலர்கள் நியமனம் சங்க துணைத்தலைவர் கோரிக்கை
ராஜபாளையம்:தமிழகத்தில் ஊராட்சி செயலர்கள் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில துணைத்தலைவர் ராமசுப்பு கூறினார்.ராஜபாளையத்தில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 12,524 ஊராட்சி செயலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.வரிவசூல், தெரு விளக்கு பராமரிப்பு, தெருக்கள், வாறுகால் பராமரிப்பு, மின் கட்டணம் செலுத்துதல், குடிநீர் விநியோகம் மற்றும் கட்டட வரைபட அனுமதி வழங்கல் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட பதிவேடுகள் பராமரித்தல், இது தவிர அரசு கேட்கக்கூடியபுள்ளி விவர பட்டியலை தயாரித்து ஒன்றிய அலுவலகத்திற்கு வழங்குதல் என இரவு 7:00 மணி வரை அரசு கூறும் பணிகளைசெய்து வருகின்றனர்.ஆனால் ஊராட்சி தலைவரின் செயல்களுக்கு ஒத்து வராத ஊராட்சி செயலர்களை 15 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னும் பல்வேறு காரணங்களை கூறி பணிநீக்கம் செய்துவிட்டு ஊராட்சி தலைவரின் அதிகாரத்தை வைத்து ரத்த சொந்தத்தினரை பணி நியமனம் செய்கின்றனர். ஊராட்சி செயலர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.தமிழகம் முழுவதும் தற்போது 800 ஊராட்சிகளில் செயலாளர்கள் நிரப்பப்படாமல் உள்ளது. கூடுதல் பொறுப்பில் பணிச்சுமை அதிகரிப்பதுடன் மக்களுக்கான திட்டங்கள் சென்றடைய தாமதம் ஆகிறது. இச்சிக்கலை தீர்க்க தகுதியான பணியாளர்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நியமனம் செய்ய வேண்டும் என்றார்.