அங்கீகாரம் இல்லாத தனியார் நர்சிங் கல்லுாரி தாளாளர் கைது
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அங்கீகாரம் இல்லாத தனியாரின் தமிழ்நாடு நர்சிங் கல்லுாரி தாளாளரை போலீசார் கைது செய்தனர்.அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரத்தில் தனியார் நர்சிங் கல்லுாரி உள்ளது. இங்கு 222 மாணவிகள் படித்து வந்தனர். இக்கல்லுாரிக்கு எம்.ஜி.ஆர்., பல்கலையால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்தது.தாங்கள் வழங்கிய அசல் சான்றிதழ்கள், கல்வி கட்டணத்தை திரும்ப வழங்க கோரி மாணவிகள் ஒரு வாரத்திற்கு முன் உள்ளிருப்பு போராட்டம், மறியல் செய்தனர். நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.விருதுநகர் மாவட்ட மருத்துவ, சுகாதார பணிகள் இணை இயக்குனர் பாபுஜி தலைமையில் அதிகாரிகள் கல்லுாரியில் ஆய்வு செய்தனர். அங்கீகாரம் வழங்கப்படாதது தெரிந்தது. தாளாளர் டிக்காக் ஜாக்சன் 39, மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ., வள்ளிக் கண்ணு தெரிவித்த நிலையில், நேற்று வி. ஏ.ஓ., பத்மாவதி புகார்படி, டவுன் போலீசார் டிக்காக் ஜாக்சனை கைது செய்தனர்.