உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடும்பத்தினருடன் கேரள முதியவரை சேர்த்து வைத்த ஆவியூர் போலீஸ்காரர்

குடும்பத்தினருடன் கேரள முதியவரை சேர்த்து வைத்த ஆவியூர் போலீஸ்காரர்

விருதுநகர் : ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தினரை விட்டு பிரிந்த கேரள முதியவரை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் போலீஸ்காரர் ரங்கராஜன் உதவி செய்து சேர்த்து வைத்துள்ளார். அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.ரங்கராஜன் இரவு பணி முடித்து டூவீலரில் ஜன., 25 காலை 8:00 மணிக்கு மாவட்ட எல்லைப்பகுதியான ஆவியூரில் தனியார் தோட்டம் அருகே சென்றார். அப்போது ரோட்டோரம் முதியவர் ஒருவர் நிற்பதை கண்டார். பசியுடன் இருந்த முதியவருக்கு உணவு வாங்கி கொடுத்தார். முதியவர் மலையாளத்தில் பேசியதால் ரங்கராஜனுக்கு புரியவில்லை. அவரது சட்டையில் இருந்த வங்கி பாஸ்புக்கில் அவரது பெயர் முரளி என்றும், கேரள மாநிலம் கோட்டயம் வெல்லுார் என்ற முகவரியும் இருந்தது. அதையடுத்து முதியவரை குளிக்க வைத்து புது உடைகளை வழங்கி போட்டோ எடுத்து வெல்லுார் போலீசாருக்கு அனுப்பினார். அவர்கள் விசாரித்து ரங்கராஜனிடம் அந்த முதியவர் காணாமல் போய் ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது என்றும், அவரை பத்திரமாக அனுப்பி வைக்கும்படியும் கூறினர்.அதையடுத்து முதியவரை முரளியை திருமங்கலம் பஸ் நிறுத்தத்திற்கு அழைத்து சென்று டிக்கெட் எடுத்து கையில் ரூ.500 பணம் கொடுத்து தேனி வழியாக மூணாறு செல்லும் பஸ்சில் ரங்கராஜன் ஏற்றிவிட்டார். வழியிலுள்ள பூம்பாறையில் முதியவரை இறக்கி விடும்படி கூறியுள்ளார். இதுகுறித்து பூம்பாறை போலீசாரிடம் தெரிவித்து, அங்கு இறங்கும் முதியவரை கோட்டயம் பஸ்சில் ஏற்றி விடும்படி அறிவுறுத்தினார். அதன்படி பூம்பாறை போலீசார் முதியவரை கோட்டயம் பஸ்சில் ஏற்றி விட்டு வெல்லுார் போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்கள் அவரை மீட்டு குடும்பத்தினருடன் சேர்த்தனர்.ஒன்றரை ஆண்டுகள் கழித்து முதியவரை குடும்பத்தினருடன் இணைக்க உதவிய ரங்கராஜனை பலரும் பாராட்டி வருகின்றனர். ரங்கராஜன் ஆதரவற்றவர்களை மீட்டு அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !